சீனாவின் CPEC வழித்தட திட்டத்தில் மூன்றாம் நாடுகள் இணைய இந்தியா எதிர்ப்பு..!

சீனா பாகிஸ்தான் பொருளாதார வழித்தட (CPEC) திட்டங்களில் மூன்றாம் நாடுகள் பங்கேற்பதை எதிர்த்து இந்தியா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. வெளியுறவு அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ செய்தி தொடர்பாளர் அரிந்தம் பாக்சி இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

அறிக்கையில், CPEC திட்டங்கள் என அழைக்கப்படுவதில் மூன்றாம் நாடுகளின் முன்மொழியப்பட்ட பங்கேற்பை ஊக்குவிப்பது குறித்த அறிக்கைகளை நாங்கள் பார்த்தோம். எந்தவொரு தரப்பினரின் இத்தகைய நடவடிக்கைகளும் இந்தியாவின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை நேரடியாக மீறுவதாகும்.

CPEC என அழைக்கப்படும் திட்டத்தை இந்தியா உறுதியாகவும், தொடர்ச்சியாகவும் எதிர்க்கிறது. அவை பாகிஸ்தானால் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்ட இந்திய நிலப்பரப்பில் உள்ளன. இதுபோன்ற நடவடிக்கைகள் இயல்பாகவே சட்டவிரோதமானது, சட்டத்திற்கு புறம்பானது மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாதது. அவை அதற்கேற்ப இந்தியாவால் நடத்தப்படும் என அரிந்தம் பாக்சி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

கடந்த ஜூலை 23 அன்று சீனா மற்றும் பாகிஸ்தான் பொருளாதார வழித்தட (CPEC) திட்டங்ளில் சேருமாறு பாகிஸ்தானும் சீனாவும் மூன்றாம் நாடுகளை அழைத்துள்ளன. சர்வதேச ஒத்துழைப்பு மற்றும் ஓருங்கிணைப்பு தொடர்பான CPEC கூட்டு பணிக்குழு (JWG) ஜூலை 22 வெள்ளிக்கிழமை அன்று ஒரு கூட்டத்தை நடத்தியது. இந்த கூட்டத்தில் ஆர்வமுள்ள மூன்றாம் தரப்பு நாடுகளை அந்த குழு வரவேற்றது.

பாகிஸ்தான் தற்போது மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ள நிலையில், 65 பில்லியன் டாலர் மெகா திட்டத்தின் இரண்டாம் கட்டம் தொடங்கியுள்ளது. CPEC என்பது சீனாவின் பெல்ட் அண்ட் ரோடு முன்முயற்சியின் மையமாக உள்ளது. இது தெற்கு மற்றும் தென்கிழக்கு, ஆசியா, மத்திய கிழக்கு, ஆப்ரிக்கா மற்றும் ஐரோப்பா உடன் இணைக்கும் பட்டுப்பாதை திட்டமாகும்.

2015 ல் சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் அப்போதைய பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் ஆகியயோர் CPEC திட்டத்தை தொடங்கினர். ஆனால் இந்த திட்டம் பாகிஸ்தானின் பொருளாதாரத்தை அசைத்துள்ளது. பாகிஸ்தான் இந்த திட்டத்திற்கான பொருட்களை பில்லியன் கணக்கான டாலர்களை கொண்டு இறக்குமதி செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

இதனால் நாட்டில் அந்நிய செலாவணி கையிருப்பு குறைந்து விட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் கொரோனா தொற்றும் பாகிஸ்தான் பொருளாதாரத்தை பாதித்துள்ளது. இதுதவிர இந்த CPEC வழித்தடம் பலூசிஸ்தான் வழியாக செல்வதால் பலூச் மக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.