மலேசியாவிற்கு 18 இலகுரக தேஜஸ் போர் விமானங்களை விற்பனை செய்ய உள்ள இந்தியா..?

இந்தியா மலேசியாவிற்கு 18 இலகுரக போர் தேஜாஸ் போர் விமானங்களை விற்பனை செய்ய உள்ளதாக பாதுகாப்புத்துறை இணை அமைச்சர் அஜய் பட் தெரிவித்துள்ளார். மேலும் மலேசியா தவிர அமெரிக்கா, இந்தோனேசியா, எகிப்து, ஆஸ்திரேலியா, அர்ஜென்டினா மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளும் தேஜஸ் போர் விமானங்களை வாங்க ஆர்வம் தெரிவித்துள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார்.

லோக்சபாவில் கேள்விக்கு எழுத்துப்பூர்வமான பதிலளித்த பாதுகாப்புத்துறை இணை அமைச்சர் அஜய் பட், அரசுக்கு சொந்தமான இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனம் 2019 பிப்ரவரியில் மலேசியாவின் ராயல் மலேசிய விமானப்படைவிடம் இருந்து தேஜஸ் போர் விமானங்களுக்கான கோரிக்கையை பெற்றதாக கூறியுள்ளார்.

அதனை தொடர்ந்து கடந்த ஆண்டு அக்டோபரில் ராயல் மலேசியன் விமானப்படை 10 இலகுரக போர் விமானத்திற்கான டெண்டருக்கான முன்மொழிவை வழங்கியதாக தெரிவித்துள்ளார். மலேசியா தவிர அமெரிக்கா, அர்ஜென்டினா, எகிப்து, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் மற்றும் ஆஸ்திரேலியான போன்ற நாடுகளும் தேஜஸ் போர் விமானங்களை வாங்க ஆர்வமாக உள்ளதாக அஜய் பட் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு இந்திய விமானப்படைக்கு 83 தேஜஸ் போர் விமானங்களை வாங்க இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்துடன் மத்திய அரசு 48,000 கோடி ஒப்பந்தம் செய்தது. வெளிநாட்டு பாதுகாப்பு உபகரணங்களை நம்பி இருப்பதை குறைக்க பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கம் உள்நாட்டிலேயே பாதுகாப்பு உபகரணங்களை தயாரித்து வருகிறது.

தற்போது இந்தியா ரஷ்யா, பிரிட்டன் மற்றும் பிரெஞ்சு போர் விமானங்களை பயன்படுத்தி வருகிறது. மேலும் சோவியத் கால ரஷ்ய போர் விமானமான மிக்-21 போர் விமானத்தை 2025 ஆம் ஆண்டுடன் ஓய்வு அளிக்கப்படும் என கூறியுள்ளது. ஏனெனில் மிக்-21 போர் விமானம் கடந்த சில வருடங்களாகவே விபத்தை சந்தித்து வருகின்றன.

Leave a Reply

Your email address will not be published.