இலங்கை ஆயுத படைகளுக்கு பயிற்சி அளிக்க உள்ள இந்திய இராணுவம்..!

இலங்கை ஆயுத படைகளுக்கு பயிற்சி அளிக்க இந்திய இராணுவ நிறுவனங்கள் இலங்கை இராணுவத்திற்கு விருப்பமான தேர்வாக இருப்பதாக இந்திய தூதரகம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

இலங்கை வீரர்களுக்கு பயிற்சி அளிக்க ஆண்டுதோறும் 1,500-1,700 இடங்கள் ஒதுக்கப்படுகின்றன. பாதுகாப்புத்துறையில் இருதரப்பு ஈடுபாடு பல பரிணாமங்களை கொண்டுள்ளதாக இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. கோவிட்-19 தொற்றுநோயின் போதும் உயர்மட்ட பரிமாற்றங்கள் இருந்ததாக தூதரகம் தெரிவித்துள்ளது.

மேலும் SLINEX என்ற கடற்படை பயிற்சி மற்றும் மித்ரா சக்தி என்ற இராணுவ பயிற்சி ஆகியவை ஒவ்வொரு ஆண்டும் இந்தியா அல்லது இலங்கையில் நடத்தப்படுகின்றன. போதைப்பொருள் மற்றும் மனித கடத்தல் போன்ற பொதுவான பாதுகாப்பு சவால்களை கையாள்வதில் இருதரப்பும் நெருக்கமாக ஒத்துழைப்பதாக இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

இலங்கையின் பாதுகாப்புத்துறை அமைச்சர் பிரேமிதா பண்டார தென்னகோன், தற்போது இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்தியாவின் DefExpo2022 பாதுகாப்பு கண்காட்சியில் கலந்து கொள்வதற்காக இந்தியா வந்துள்ளார். பாதுகாப்புத்துறையில் இந்தியா மற்றும் இலங்கை இடையிலான நட்புறவை தென்னகோன் பாராட்டினார்.

அனுபவ பகிர்வு மற்றும் திறன் மேம்பாடு ஆகியவை இந்தியா-இலங்கை பாதுகாப்பு ஒத்துழைப்பின் முக்கிய தூணாக உள்ளதாக இந்திய தூதரகம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. சமீபத்தில் சீன உளவு கப்பல் இலங்கை வந்த நிலையில், அக்கப்பல் வருவதற்கு இந்தியா தனது எதிர்ப்பை தெரிவித்தது.

இதனால் இந்தியா இலங்கை இடையே விரிசல் ஏற்பட்டதாக கூறப்பட்ட நிலையில் தற்போது இந்திய தூதரகத்தின் இந்த அறிக்கை வெளிவந்துள்ளது. மேலும் இலங்கை பாதுகாப்பு அமைச்சரும் இந்தயாவிற்கு பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் விரையில் இந்தியாவின் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கை சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published.