இலங்கையில் 50 எரிபொருள் நிலையங்களை திறக்க உள்ள இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன்..!

இலங்கை தற்போது பெரும் எரிபொருள் நெருக்கடி மற்றும் மோசமான பணவீக்கத்தை எதிர்கொண்டுள்ள நிலையில், அந்நிய செலாவணி பற்றாக்குறையால் கடந்த சில மாதங்களாக உணவு மற்றும் பல அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் இலங்கை பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் வகையில் இந்தியாவின் லங்கா இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (LIOC) நிறுவனம் இலங்கையில் எரிபொருள் விநியோகத்தை அதிகரிக்கும் வகையில் சுமார் 50 புதிய எரிபொருள் நிலையங்களை திறக்க உள்ளதாக அறிவித்துள்ளது. LIOC நிறுவனமானது இந்தியாவின் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனின் துணை நிறுவனமாகும்.

LIOC ஏற்கனவே இலங்கை முழுவதும் 216 எரிபொருள் நிலையங்களை கொண்டுள்ளது. மேலும் இந்த நிறுவனம் கொழும்பு பங்கு சந்தையிலும் பட்டியலிடப்பட்டுள்ளது. LIOC நிர்வாக இயக்குனர் மனோஜ் குப்தா கூறுகையில், நாட்டின் நிலைமையை மேம்படுத்துவதற்காக மேலும் சுமார் 5.5 மில்லியன் டாலர்களை முதலீடு செய்ய உள்ளதாக கூறியுள்ளார்.

இலங்கையின் மற்றொரு மிகப்பெரிய எரிபொருள் விற்பனையாளரான, அரசால் நடத்தப்படும் சிலோன் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நாடு முழுவதும் சுமார் 1,190 எரிபொருள் நிலையங்களை கொண்டுள்ளது. இலங்கையின் திரிகோணமலையில் உள்ள எண்ணெய் சேமிப்பு கிடங்குகளில் 75 கிடங்குகளின் கட்டுப்பாட்டை பெறுவதற்கு டிசம்பரில் LIOC கையெழுத்திட்டது.

இலங்கைக்கு எரிபொருள், உணவு, உரங்கள் மற்றும் மற்ற அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்காக இந்தியா இதுவரை சுமார் 4 பில்லியன் டாலர்களை வழங்கியுள்ளது. தற்போது கூடுதல் கடன் வழங்ககோரி இந்தியாவுடன் இலங்கை பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

இதுதவிர 3 பில்லியன் டாலர் பிணை தொகைக்காக சர்வதேச நாணய நிதியத்திடமும் இலங்கை பேசி வருகிறது. இலங்கைக்கு ஆதரவாக இந்தியாவும் சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. மேலும் சீனா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளிடமும் இலங்கை கூடுதல் கடன் தொகைக்காக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published.