சீனாவுக்கு எதிராக இலங்கையின் கொழும்பு துறைமுகத்தில் முதலீடு செய்யும் இந்திய தனியார் நிறுவனம்..
இலங்கை தலைநகர் கொழும்பு துறைமுகத்தில் ஒரு புதிய முனையத்தை உருவாக்க இந்திய நிறுவனம் ஒன்று 700 மில்லியன் டாலர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
கொழும்பு துறைமுகத்தில் சீனாவின் ஜெட்டி நிறுவனம் 500 மில்லியன் முதலீட்டில் ஒரு முனையத்தை உருவாக்கி உள்ளது. இலங்கை அரசு கேட்டுகொண்டதன் பேரில் அதானி நிறுவனம் கொழும்புவின் சீன முனையத்திற்கு அருகிலேயே ஒரு முனையத்தை உருவாக்க உள்ளது.
இதற்கான ஒப்பந்தம் வியாழக்கிழமை கையெழுத்தானதாக இலங்கை துறைமுக ஆணையம் (SLPA) தெரிவித்துள்ளது. இலங்கை துறைமுகத்தில் இதுவரையில் இல்லாத வகையில் 700 மில்லியனுக்கு அதிகமாக முதலீடு செய்யப்படுவது இதுவே முதல் முறை.
சீனா கட்டமைத்து வரும் முனையம் 1.6 கிலோ மீட்டர் நீளமும், 20 மீட்டர் ஆழமும் உடையது. இந்த முனையம் இரண்டு வருடத்திற்குள் கட்டமைக்கப்பட்டு விடும். 35 வருட குத்தகைக்கு பிறகு இலங்கை துறைமுக ஆணையத்திடம் ஒப்படைக்கப்படும்.
ஏற்கனவே சீனாவின் கடன்பொறியில் சிக்கியதால் ஹம்பந்தோட்டா துறைமுகத்தை சீனா 99 வருட குத்தகைக்கு எடுத்துள்ளது. கடந்த 2014 ஆம் ஆண்டு சீன நீர்மூழ்கி கப்பல்கள் இலங்கையின் துறைமுக ஆணையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன.
இதற்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்ததால் இலங்கை சீன நீர்மூழ்கி கப்பல் நிறுத்துவதற்கு தடை விதித்தது. அதன் பிறகு ஹம்பந்தோட்டா துறைமுகத்தை 2017 ஆம் ஆண்டு 99 வருட குத்தகைக்கு எடுத்தது. இருப்பினும் இராணுவ பயன்பாட்டுக்கு பயன்படுத்த கூடாது என இலங்கை கூறியுள்ளது.
இந்த நிலையில் அதானி நிறுவனம் இலங்கையின் தனியார் நிறுவனமான ஜான் கீல்ஸ் மற்றும் அரசு நிறுவனமான இலங்கை துறைமுக ஆணையத்துடன் இணைந்து இந்த முனையத்தை கட்டமைக்க உள்ளன. இந்த ஒப்பந்தம் பல ஆண்டுகளுக்கு முன்பே கொண்டுவரப்பட்டது. ஆனால் இலங்கை தொழிற்சங்கங்களின் எதிர்ப்பால் கைவிடப்பட்டது.
இந்த முனையத்தின் 51 சதவீத பங்குகள் அதானி நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் என கூறப்பட்டுள்ளது. இந்த கொழும்பு துறைமுகம் துபாய் மற்றும் சிங்கப்பூர் இடையே உள்ளதால் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. ஒருவேளை கன்னியாகுமரியில் உள்ள குளச்சல் துறைமுகத்தை சர்வதேச அளவில் மேம்படுத்தினால் கொழும்புவை விட குளச்சல் துறைமுகமே முக்கியமானதாக பார்க்கப்படும்.
Also Read: சீனாவை விட்டு வெளியேறும் பெரும் நிறுவனங்கள்.. இந்தியாவில் கால்பதிக்கும் ஆப்பிள்..