உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இந்தியாவின் முதல் விமானந்தாங்கி போர்கப்பல் அடுத்த மாதம் கடற்படையில் இணைகிறது..?

முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இந்தியாவின் முதல் உள்நாட்டு விமானந்தாங்கி போர்கப்பலான INS விக்ராந்த் நான்காவது கட்ட கடல் சோதனையை நிறைவு செய்துள்ள நிலையில் அடுத்த மாதம் இந்திய கடற்படையில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

INS விக்ராந்த் விமானந்தாங்கி போர்கப்பல் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் முதற்கட்ட கடல் சோதனையை நிறைவு செய்தது. அதனை தொடர்ந்து அக்டோபர் மாதம் இரண்டாம் கட்ட சோதனையும், இந்த ஆண்டு ஜனவரி மாதம் மூன்றாம் கட்ட சோதனையும், தற்போது ஜூலை 10 அன்று நான்காம் கட்ட சோதனையை நிறைவு செய்துள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட சோதனைகளில் உந்துவிசை எந்திரங்கள், மின்னணு தொகுப்புகள், உயிர்காக்கும் உபகரணங்கள், கப்பலின் வழிசெலுத்தல் மற்றும் தொடர்பு அமைப்புகள் ஆகியவை சோதனை செய்யப்பட்டன. இந்த நிலையில் நான்காவது கட்ட பரிசோதனையில், விமான வசதிகள், முக்கிய தளவாடங்கள் மற்றும் ஆயுத அமைப்புகளின் ஒருங்கிணைந்த சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

நாடு விடுதலை அடைந்த 75 ஆம் ஆண்டின் நினைவாக அடுத்த மாதம் ஆகஸ்டு 15 ஆம் தேதி INS விக்ராந்த் இந்திய கடற்படையில் இணைக்கப்படும் என கூறப்படுகிறது. இதன் மூலம் உள்நாட்டிலேயே விமானந்தாங்கி போர்கப்பலை தயாரித்த அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ரஷ்யா, இத்தாலி மற்றும் சீனா ஆகிய நாடுகளின் பட்டியலில் தற்போது இந்தியாவும் இணைந்துள்ளது.

சீனாவிடம் தற்போது 2 விமானந்தாங்கி போர்கப்பல்கள் செயலில் உள்ள நிலையில் 3வது விமானந்தாங்கி கப்பலை சமீபத்தில் கடற்படையில் இணைத்தது. அவை செயல்பாட்டுக்கு வர சில ஆண்டுகள் ஆகலாம் என கூறப்படுகிறது. மேலும் நான்காவது விமானந்தாங்கி போர்கப்பலை கட்டமைத்து வருகிறது.

ஆனால் தற்போது இந்தியாவிடம் INS விக்ரமாதித்யா போர் கப்பல் மட்டுமே செயலில் உள்ளது. INS விக்ரமாதித்யா ரஷ்யாவிடம் இருந்து வாங்கப்பட்டு மேம்படுத்தப்பட்ட கப்பலாகும். இந்த நிலையில் இந்தியாவின் முதல் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்டு கப்பலான INS விக்ராந்த் அடுத்த மாதம் கடற்படையில் இணைக்கப்பட உள்ளது.

INS விக்ராந்த் கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் கட்டப்பட்டது. கப்பலின் வடிவமைப்பிற்கான பணிகள் 1999ல் ஆண்டும் கட்டுமானம் 2012ல் தொடங்கப்பட்டு 2022ல் சேவையில் இணைக்கப்பட உள்ளது. விமானந்தாங்கி போர்கப்பலின் விமான சோதனைகள் அடுத்த ஆண்டின் நடுப்பகுதிக்குள் நிறைவடையும் என கூறப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் முழு செலவு கிட்டத்தட்ட 23,000 கோடி ஆகும்.

INS விக்ராந்த் விமானந்தாங்கி போர்கப்பலில் 36-40 போர் விமானங்கள் நிறுத்தப்பட உள்ளன. இது 262 மீட்டர் நீளமும், 62 மீட்டர் அகலமும் 59 மீட்டர் உயரமும் கொண்டது. சுமார் 45,000 மெட்ரிக் டன் எடை கொண்டது. மணிக்கு 56 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்ககூடியது. 14 தளங்கள் கொண்ட கப்பலில் 2,300 க்கும் மேற்பட்ட அறைகள் உள்ளன. இதில் 196 அதிகாரிகள் மற்றும் 1,449 மாலுமிகள் இருப்பார்கள் மற்றும் பெண் அதிகாரிகளுக்கு சிறப்பு அறைகள் உள்ளன.

Leave a Reply

Your email address will not be published.