பிலிப்பைன்ஸை தொடர்ந்து பிரம்மோஸ் ஏவுகணையை வாங்க உள்ள இந்தோனேசியா..?

பிலிப்பைன்ஸை தொடர்ந்து பிரம்மோஸ் சூப்பர்சோனிக் க்ரூஸ் ஏவுகணையின் கடற்கரையை அடிப்படையாக கொண்ட கப்பல் எதிர்ப்பு ஏவுகணையை இந்தோனேசியா வாங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த பிரம்மோஸ் சூப்பர்சோனிக் க்ரூஸ் ஏவுகணையை ஏற்றுமதி செய்வதற்கான பேச்சுவார்த்தை இந்தோனேசியா உடன் மேம்பட்ட நிலையில் உள்ளது. அந்த நாட்டின் உள்நாட்டு விவகாரங்களின் காரணமாக இந்த ஒப்பந்தம் முன்பே கையெழுத்து ஆகி இருக்கலாம் என கூறப்படுகிறது. இருப்பினும் இந்த ஆண்டு இறுதியில் அல்லது அடுத்த ஆண்டு துவக்கத்தில் அதிகாரப்பூர்வமாக ஒப்பந்தம் கையெழுத்தாகும் என கூறப்படுகிறது.

சீனா இந்தோனேசியாவின் பிரத்யேக பொருளாதார மண்டலம் உட்பட தென்சீனக் கடல் முழுவதையும் உரிமை கோருகிறது. மேலும் இந்தோனேசியா மீனவர்கள் மற்றும் இந்தோனேசியா கடற்பரப்பில் நுழையும் சீன கடலோர காவல்படை இடையே அடிக்கடி மோதல் ஏற்படும் சூழல் உருவாகி வருகிறது.

இந்த நிலையில் பிலிப்பைன்ஸ் நாட்டிற்கு அடுத்து இந்தியாவிடம் இருந்து பிரம்மோஸ் ஏவுகணைகளை இறக்குமதி செய்யும் இரண்டாவது நாடாக இந்தோனேசியா உருவெடுத்துள்ளது. இந்த ஆண்டின் துவக்கத்தில் இந்தியாவும் பிலிப்பைன்ஸூம் 374.96 மில்லியன் டாலர் மதிப்பில் பிரம்மோஸ் சூப்பர்சோனிக் க்ரூஸ் ஏவுகணையின் கடற்கரை அடிப்படையிலான கப்பல் எதிர்ப்பு ஏவுகணை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பிரம்மோஸ் ஏவுகணை அந்நாட்டின் போர்கப்பல்களில் பொருத்தப்பட உள்ளது. பிரம்மோஸ் ஏரோஸ்பேஸ் கூட்டு குழு ஏற்கனவே இந்தோனேசியாவின் கப்பல் கட்டும் தளத்திற்கு சென்று ஏவுகணையை பொருத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்துள்ளது.

பிரம்மோஸ் ஏவுகணை உலகின் அதிவேக சூப்பர்சோனிக் குரூஸ் ஏவுகணைகளில் ஒன்றாகும். இது 2.8 மேக் வேகத்தில் அல்லது ஒலியை விட 3 மடங்கு வேகத்தில் பயணிக்கக்கூடியது. 350 கிலோமீட்டர் தூரம் வரை சென்று தாக்கக்கூடியது. இதன் தற்போதைய மாறுபாடு 500 கிலோமீட்டர் ஆகும். இருப்பினும் ஏற்றுமதிக்கு 290 கிலோமீட்டர் வரை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா தவிர, மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து, வியட்நாம் ஆகிய நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. மலேசியா விரைவில் தேஜஸ் இலகுரக போர்விமானங்களை வாங்குவதற்கான இறுதி முடிவை அறிவிக்க உள்ளது. பிரம்மோஸ் ஏவுகணைக்கான பேச்சுவார்த்தைகள் மலேசியாவுடன் ஆரம்ப கட்டத்தில் நடந்து வருகின்றன.

பிரம்மோஸ் மற்றும் ஆகாஷ் ஏவுகணைகள் இரண்டு ஏவுகணைகளை வாங்குவதற்கும் வியட்நாம் இந்தியாவுடன் பேச்சுவார்தை நடத்தி வருகிறது. இந்தோனேசியாவிற்கு பிரம்மோஸ் ஏவுகணையை ஏற்றுமதி செய்வதற்கு ரஷ்யாவிற்கு எந்த ஆட்சேபனையும் இருக்காது. ஏனெனில் ரஷ்யா ஏற்கனவே சுகோய்-27 மற்றும் கிலோ கிளாஸ் நீர்மூழ்கி கப்பல்களை இந்தோனேசியாவிற்கு விற்பனை செய்துள்ளது.

2018 ஆம் ஆண்டு முதன்முறையாக இந்தியா மற்றும் இந்தோனேசியா இடையே இருதரப்பு கடல் போர்பயிற்சி சமுத்திர சக்தி நடைபெற்றது. ஆசியான் நாடுகளை தவிர பிரேசில், தென்னாப்ரிக்கா மற்றும் அர்ஜென்டினா ஆகிய நாடுகளும் பிரம்மோஸ் ஏவுகணையை வாங்க இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.

Leave a Reply

Your email address will not be published.