சூயஸ் கால்வாய்க்கு மாற்றாக ஈரான் வழியாக இந்தியா வந்தடைந்த ரஷ்ய சரக்குகள்..!

ரஷ்ய ரயில்வேயின் துணை நிறுவனமான RZD லாஜிஸ்டிக்ஸ், சர்வதேச வடக்கு-தெற்கு போக்குவரத்து வழித்தடத்தின் (INSTC) வழியாக ரஷ்யாவில் இருந்து இந்தியாவிற்கு ரயில்கள் மூலம் ஜூன் 13 அன்று புறப்பட்ட சரக்குகளின் முதல் சோதனை போக்குவரத்தை முடித்துவிட்டதாக ஜூலை 7 அன்று அறிவித்துள்ளது.

கடந்த மாதம் 41 டன் மர லேமினேட் ஆன இரண்டு கொள்கலன்கள் கொண்ட சரக்கு பெட்டிகள் ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் இருந்து ரஷ்ய துறைமுகமான அஸ்ட்ராகானுக்கு புறப்பட்டு அங்கிருந்து ஈரானின் அஞ்சலி காஸ்பியன் துறைமுகத்திற்கு அனுப்பப்பட்டது. பின்னர் அங்கிருந்து ஈரான் வழியாக பந்தர் அப்பாஸூக்கு கொண்டு செல்லப்பட்டது.

அங்கிருந்து சரக்கு கப்பல் மூலம் மும்பை நவா ஷேவா துறைமுகத்திற்கு வந்தடைந்தது. இந்த முழு பயணமும் 25-26 நாட்கள் என கூறப்பட்டுள்ளது. இதனை ஈரான் அரசுக்கு சொந்தமான ஈரான் ஷிப்பிங் லைன் குழுமத்திற்கு சொந்தமான கப்பல் மூலம் சரக்குகள் கொண்டு செல்லப்பட்டன.

சோதனை பயணம் வெற்றிகரமாக முடிவடைந்துள்ள நிலையில், தனது முதல் சரக்கு பயணத்தை வடக்கு-தெற்கு போக்குவரத்து வழித்தடம் வழியாக பயணத்தை தொடங்கியுள்ளதாக RZD லாஜிஸ்டிக்ஸ் அறிவித்துள்ளது. இந்தய பெருங்கடல் மற்றும் பாரசீக வளைகுடாவை ஈரான் வழியாக காஸ்பியன் கடலுடன் இணைக்கும் INSTC வழித்தடம் 7,200 கிலோமீட்டர் நீளமுள்ள இந்திய-ரஷ்ய வர்த்தகத்திற்கான முக்கிய சர்வதேச கப்பல் பாதையாகும்.

இந்த INSTC வழித்தடம் ஈரான் வழியாக ரஷ்யாவில் இருந்து இந்தியாவிற்கு சரக்குகளை அனுப்புவதற்கு 25 நாட்கள் மட்டுமே ஆகிறது. இதற்கு முன்பு ரஷ்யாவில் இருந்து சரக்குகள் பால்டிக் கடல்- வட கடல்- மத்திய தரைக்கடல்-சூயஸ் கால்வாய்-செங்கடல் மற்றும் அரேபிய கடல் வழியாக இந்தியா வந்தடைவதற்கு 40 நாட்கள் ஆகும். தற்போது ஈரான் வழியாக 25 நாட்கள் மட்டுமே ஆவதால் போக்குவரத்து செலவு 30 சதவீதம் அளவிற்கு குறைகிறது.

இந்த வழித்தடம் மூலம் சுமார் ஒரு டஜனுக்கும் மேற்பட்ட நாடுகளுக்கு சரக்குகளை அனுப்ப முடியும். இந்த வழித்தடம் மூலம் இந்தியா சூயஸ் கால்வாயை தவிர்த்து ஈரான் வழியாக விரைவாக ஐரோப்பாவிற்கு சரக்குகளை அனுப்ப முடியும். கடந்த வாரம் ஆறாவது காஸ்பியன் உச்சி மாநாட்டில் பேசிய புதின், காஸ்பியன் கடலில் ஒரு பெரிய சர்வதேச தளவாட மையத்தை உருவாக்க ரஷ்யா கூடுதல் முயற்சிகளை மேற்கொள்ளும் என கூறினார்.

Leave a Reply

Your email address will not be published.