இந்தியா ஆப்கனுக்கு சபஹர் துறைமுகம் வழியாக உணவுபொருட்களை கொண்டு செல்ல ஈரான் அனுமதி.

தாலிபான் ஆட்சியில் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கிதவிக்கும் ஆப்கானிஸ்தானுக்கு ஈரான் வழியாக கோதுமை, மருந்துகள் மற்றும் கோவிட் தடுப்பூசிகளை வழங்க இந்தியாவுக்கு ஈரான் அனுமதி அளித்துள்ளது. இந்தியாவுடன் இணைந்து செயல்பட இருப்பதாகவும் ஈரான் அறிவித்துள்ளது.

ஈரான் வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமீர்-அப்துல்லாஹியன் சனிக்கிழமை அன்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உடன் தொலைப்பேசி வாயிலாக பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தையில் ஆப்கானிஸ்தானுக்கு ஈரானின் சபஹர் துறைமுகம் வழியாக ஆப்கானிஸ்தானுக்கு உணவு மற்றும் மருந்து பொருட்கள் கொண்டு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கச்சா எண்ணெய் அதிகம் கொண்ட ஈரானின் தெற்கு கடற்கரையில் சிஸ்தான்-பலுசிஸ்தான் மகாணத்தில் அமைந்துள்ள சபஹர் துறைமுகமானது, வர்த்தக உறவுகளை மேம்படுத்தும் நோக்கில் இந்தியா மற்றும் ஈரான் இணைந்து உருவாக்கி பயன்படுத்தி வருகின்றன. ஆப்கனில் கடந்த ஆகஸ்டு மாதம் தாலிபான்கள் ஆட்சியை பிடித்ததில் இருந்து கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு வருகிறது.

இந்தியாவிற்கும் ஆப்கானிஸ்தானிற்கும் இடையே தற்போது நேரடி விமானம் இல்லாததால் டிசம்பர் 11 அன்று சிறப்பு விமானத்தில் 1.6 டன் உயிர்காக்கும் மருந்துகளை அனுப்பியது. அதன் பிறகு ஜனவரி 1 அன்று தெஹ்ரான் வழியாக இந்திய அரசு ஆப்கானிஸ்தானுக்கு 500,000 டோஸ் கோவிட் தடுப்பூசியை வழங்கியது. பின்னர் ஜனவரி 7 அன்று இந்தியா 2 டன் உயிர்காக்கும் மருந்துகளை துபாய் வழியாக ஆப்கனுக்கு அனுப்பியது.

Also Read: இனப்படுகொலை செய்யும் சீனாவுக்கு எதிராக வழக்கு தொடர்ந்த உய்கூர் முஸ்லிம்கள்..

ஆப்கானிஸ்தானுக்கு 50,000 டன் கோதுமைகளை பாகிஸ்தானின் வாகா வழியாக கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டது. ஆனால் அது தொடர்பான வரைவுகளை இன்னும் பாகிஸ்தான் உருவாக்காததால் தற்போது ஈரானின் சபஹர் துறைமுகம் வழியாக ஆப்கானிஸ்தானுக்கு கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது. ஈரானும் ஆப்கானிஸ்தானும் கிட்டத்தட்ட 920 கிலோமீட்டர் எல்லையை பகிர்ந்து கொண்டுள்ளன.

Also Read: நைஜீரியாவில் சீனர்களை கடத்தி சென்று சுட்டுக்கொன்ற நைஜீரிய கொள்ளையர்கள்..

இது தவிர இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஆப்கானிஸ்தான் பிரச்சனை, சர்வதேச பிரச்சனைகள், சபஹர் துறைமுகம், ஈரானிய அணுசக்தி பிரச்சனை, கோவிட்-19 பிரச்சனைகள் தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டது. ஆப்கானிஸ்தான் நெருக்கடி தொடர்பாக இரண்டு மாதங்களுக்கு முன்பாக இந்தியா நடத்திய மாநாட்டில் ஈரானின் பாதுகாப்பு ஆலோசகர், ரஷ்யா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் மற்றும் துர்க்மெனிஸ்தான் ஆகிய நாடுகளின் பாதுகாப்பு ஆலோசகர்களும் கலந்து கொண்டனர். மேலும் ஈரானின் வெளியுறவு அமைச்சர் விரைவில் இந்தியா வர உள்ளதாக அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

Also Read: நிலக்கரி ஏற்றுமதிக்கு தடை விதித்த இந்தோனேசிய அரசு.. நெருக்கடியில் சீனா..

Leave a Reply

Your email address will not be published.