ககன்யான் திட்டத்திற்கான உலகின் மிகப்பெரிய பூஸ்டரை வெற்றிகரமாக சோதனை செய்த இஸ்ரோ..
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ ஶ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் நேற்று அதிகாலை 7:20 மணி அளவில் HS200 ராக்கெட் பூஸ்டரின் முதல் நிலையான சோதனையை வெற்றிகரமாக முடித்துள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
நேற்று நடத்தப்பட்ட HS200 பூஸ்டர் சோதனையில் 203 டன் திட உந்துசக்தி ஏற்றப்பட்டது. இந்த பூஸ்டர் 20 மீட்டர் நீளமும் 3.2 மீட்டர் விட்டமும் கொண்டது. இது உலகின் இரண்டாவது பெரிய செயல்பாட்டு பூஸ்டர் ஆகும். HS200 ராக்கெட் பூஸ்டர் என்பது GSLV Mk III செயற்கைக்கோள் ஏவுகணை வாகனத்தின் S200 ராக்கெட் பூஸ்டரின் மனித மதிப்பீடு செய்யப்பட்ட பதிப்பாகும்.
அதாவது GSLV Mk III ராக்கெட் என்பது செயற்கைக்கோளை விண்வெளிக்கு எடுத்து செல்லும் ஒரு வாகனம் ஆகும். இந்தியாவின் ககன்யான் மனித விண்வெளி பயண திட்டத்தின் ஒரு பகுதியாக மனிதர்களை விண்வெளிக்கு ஏற்றி செல்வதற்கு பாதுகாப்பானதாகவும், ஏற்றதாகவும் மாற்றியமைக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டு வருகிறது.
Also Read: 1000 கோடி மதிப்பில் எதிரி இலக்கை கண்டறியும் ஸ்வாதி ரேடாரை வாங்க உள்ள இந்திய இராணுவம்..?
HS200 ராக்கெட் பூஸ்டரின் வடிவமைப்பு மற்றும் மேம்பாடு திருவனந்தபுரம் விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்திலும், உந்துசக்தி வார்ப்பு ஶ்ரீஹரிகோட்டாவில் உள்ள SDSC மையத்திலும் உருவாக்கப்பட்டது. ககன்யான் பணிக்கு பயன்படுத்தப்படும் GSLV Mk III ராக்கெட்டில் இரண்டு HS200 பூஸ்டர்கள் இருக்கும். வெள்ளிக்கிழமை சோதனையின் போது சுமார் 700 அளவுருக்கள் கண்காணிக்கப்பட்டன.
அனைத்து அமைப்புகளின் செயல்திறன் சாதாரணமாக இருந்ததாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. 203 டன் திட உந்துசக்தி ஏற்றப்பட்ட HS200 பூஸ்டர் 135 விநாடிகளுக்கு சோதனை செய்யப்பட்டது. GSLV Mk III என்பது மூன்று நிலை ராக்கெட் ஆகும். முதல் நிலை S200 திட எரிபொருளால் இயக்கப்படுகிறது. இரண்டாம் நிலை L110 திரவ எதிபொருளால் இயக்கப்படுகிறது. மூன்றாம் நிலை C25-G (கிரையோஜெனிக் உந்து விசை) திரவ ஹைட்ரஜன் மற்றும் திரவத்தால் இயக்கப்படுகிறது.
Also Read: Su-30MKI விமானத்தில் இருந்து வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்ட பிரம்மோஸ்..!
இந்த சோதனையின் போது இஸ்ரோ தலைவர் எஸ்.சோம்நாத், விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தின் இயக்குனர் எஸ்.உன்னிகிருஷ்ணன் நாயர் ஆகியோர் உடனிருந்தனர். சோதனை வெற்றிகரமாக முடிந்த நிலையில், ககன்யான் திட்டத்தில் முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. இருப்பினும் இதே பூஸ்டரின் மற்றொரு சோதனை தேவைப்படுமா என்பதை தீர்மானிக்க முழு தரவு தொகுப்பையும் நெருக்கமாக ஆராய வேண்டும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.