மீண்டும் காளி போஸ்டர் சர்ச்சை: லீனா மணிமேகலைக்கு லுக்அவுட் நோட்டீஸ்..?

திரைப்பட தயாரிப்பாளர் லீனா மணிமேகலை தனது காளி ஆவணப்படம் தொடர்பாக சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் மீண்டும் ஒரு புகைப்படத்தை பகிர்ந்த நிலையில், அவருக்கு எதிராக லுக்அவுட் நோட்டீஸ் வெளியிடப்படும் என மத்திய பிரதேச உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.

லீனா மணிமேகலை காளி ஆவணப்படம் போஸ்டரை தொடர்ந்து தற்போது மற்றொரு புகைப்படத்தை டிவிட்டரில் பகிர்ந்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். தற்போது அவர் பகிர்ந்துள்ள ட்விட்டர் பதிவில், சிவன் மற்றும் பார்வதி வேடமணிந்த இரண்டு கலைஞர்கள் புகைப்பிடிப்பதை காட்டும் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அதில் வேறு இடங்களில் என்று பதிவிட்டுள்ளார்.

அவர் இந்த புகைப்படத்தை பதிவிட்டு காளியை புகைப்பிடிப்பவராக சித்தரித்ததை நியாய்ப்படுத்த முயன்றுள்ளார். இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள அமைச்சர் இது ஒரு வக்கிரமான மனநிலை எனவும், இது தொடர்பாக டிவிட்டர் நிறுவனத்திற்கு கடிதம் எழுத உள்ளதாகவும், லுக் அவுட் நோட்டீஸ் தொடர்பாக மத்திய அரசிடம் அனுமதி கோர உள்ளதாகவும் மத்திய பிரதேச அமைச்சர் நரோத்தம் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.

நரோத்தம் மிஸ்ரா கூறுகையில், இன்று நாங்கள் ட்விட்டருக்கு கடிதம் எழுதியுள்ளோம். சிலருக்கு வக்கிரமான மனநிலை இருக்கும், மத உணர்வுகளை புண்படுத்தும் ட்வீட்களை அவர்கள் தொடர்ந்து பகிர்ந்து வருகிறார்கள். லீனா மணிமேகலை முதலில் காளி தேவி சிகரெட் புகைப்பதை போன்ற புகைப்படத்தை பகிர்ந்தார். பின்னர் சிவன் மற்றும் பார்வதி தேவி புகைப்பிடிப்பதை போன்று பகிர்ந்துள்ளார்.

இந்த ட்வீட்கள் ஒரு வக்கிரமான மனநிலையுடன் செய்யப்பட்டவை மற்றும் மக்களின் மத உணர்வுகளை புண்படுத்தும் நோக்கம் கொண்டவை என்பதால் இதுபோன்ற ட்வீட்களை தடை செய்யுமாறு ட்விட்டர் நிறுவனத்திற்கு கடிதம் எழுதியுள்ளோம். டிவிட்டரை அவர்கள் ஒரு கருவியாக பயன்படுத்துகிறார்கள். இது போன்ற ட்வீட்களை ஸ்கேன் செய்யுமாறு ட்விட்டரை வலியுறுத்தியுள்ளோம் என கூறியுள்ளார்.

மத்திய பிரதேசத்தில் காளி திரைப்படம் சர்ச்சையில் சிக்கிய நிலையில் அதன் தயாரிப்பாளர் லீனா மணிமேகலை மீதும், காளி இறைச்சி உண்ணும், மதுவை ஏற்றுக்கொள்ளும் என கூறிய திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி மஹுவா மொய்த்ரா மீதும் தனித்தனியாக வழக்கு பதியப்பட்டுள்ளது. முன்னதாக மத்திய பிரதேச முதல்வர், மத உணர்வுகளை தூண்டும் முயற்சிகள் அனுமதிக்கப்படாது என கூறியிருந்தார்.

Leave a Reply

Your email address will not be published.