மதமாற்ற எதிர்ப்பு மசோதாவுக்கு கர்நாடகா அமைச்சரவையில் ஒப்புதல்.. காங்கிரஸ் எதிர்ப்பு.
கர்நாடகாவில் முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தலைமையில் நடைபெற்ற அமைச்சரவையில் மதமாற்ற எதிர்ப்பு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த மத சுதந்திரத்திற்கான கர்நாடகா பாதுகாப்பு மசோதா 2021, டிசம்பர் 21 அன்று சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது.
கர்நாடகா சட்டப்பேரவையில் நடப்பு குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில் மதமாற்ற எதிர்ப்பு மசோதா நாளை தாக்கல் செய்யப்படுகிறது. இந்த மசோதாவிற்கு எதிர்கட்சியான காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. சட்டமன்றத்தில் தாக்கல் செய்தால் எதிர்ப்பு தெரிவிப்போம் என சித்தராமையா, டி.கே.சிவக்குமார் உள்ளிட்ட பல காங்கிரஸ் தலைவர்கள் கூறியுள்ளனர்.
இந்த மசோதா கிறிஸ்துவ சமூகத்திற்கு எதிராக இருப்பதாக டி.கே.சிவக்குமார் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இந்த மசோதா குறித்து பேசிய முதலமைச்சர் பசவராஜ் பொம்மை, மாநிலம் முழுவதும் அப்பாவி மக்கள் பணம் மற்றும் நிதியுதவியால் ஏமாற்றப்பட்டு மதம் மாற்றப்படுகிறார்கள். நமது அரசாங்கம் அப்படி ஒன்று நடக்க அனுமதிக்காது.
நம் சமூகத்தில் வறுமையை பணமாக்க முயற்சி நடக்கிறது என பசவராஜ் தெரிவித்தார். ‘மத சுதந்திரத்திற்கான கர்நாடகா பாதுகாப்பு மசோதா 2021’ன் படி, தவறான விளக்கம், வற்புறுத்துதல், மோசடி, செல்வாக்கு மற்றும் வசீகரம் அல்லது திருமணம் மூலம் ஒரு மதத்தில் இருந்து இன்னொரு மதத்திற்கு மாறுவதை தடை செய்கிறது.
கட்டாய மதமாற்றத்தில் ஈடுபடுபவர்களுக்கு 3 முதல் 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், 25,000 முதல் ஒரு லட்சம் வரை அபராதமும் விதிக்கப்படும். மசோதாவின் படி, மதம் மாற விரும்புபவர்கள் இடம் மற்றும் திட்டமிடப்பட்ட தேதி குறித்து ஒரு மாதத்திற்கு முன்பாக சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவிக்க வேண்டும்.
Also Read: மத மாற்றத்திற்கு எதிராக நாடு தழுவிய அளவில் மிகப்பெரிய பிரச்சாரம்: விஷ்வ இந்து பரிஷத் அறிவிப்பு
பின்னர் மத மாற்றங்களுக்கான நோக்கம் மற்றும் காரணம் குறித்து போலிசார் விசாரணை நடத்துவார்கள். மத சுதந்திரத்திற்கான கர்நாடகா எதிர்ப்பு மசோதா 2021, நாளை சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது. எதிர்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளதால் நாளை சட்டமன்றத்தில் அமலி ஏற்பட வாய்ப்புள்ளது.
Also Read: பெண்களின் திருமண வயதை உயர்த்தும் முடிவுக்கு சமாஜ்வாதி MP ஷபிகுர் ரஹ்மான் எதிர்ப்பு..