அரசின் கட்டுப்பாட்டில் இருந்து கோவில்களை விடுவிக்க பட்ஜெட் தாக்கல் செய்தார் கர்நாடக முதல்வர்..!

மார்ச் 4 வெள்ளிக்கிழமை அன்று சமர்பிக்கப்பட்ட 2022-23 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டில் கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை, அறநிலைய துறையின் கீழ் உள்ள கோயில்களின் மீதான அரசாங்க கட்டுப்பாட்டை முன்மொழிந்தார்.

இதேபோல் கடந்த ஆண்டு டிசம்பரில் நடைபெற்ற பாஜக மாநில செயற்குழு கூட்டத்தில் பேசிய பொம்மை, இந்து கோவில்களை அரசின் கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்க சட்டம் கொண்டு வருவது தொடர்பாக பேசினார். இந்த நிலையில் பட்ஜெட் உரையில் பேசிய பொம்மை, கோயில்கள் மீதான அரசின் கட்டுப்பாட்டை நீக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ளது.

பக்தர்களின் கோரிக்கையை பரிசீலித்து அறநிலையத்துறையின் கீழ் வரும் கோவில்களுக்கு சுயாட்சி வழங்கப்படும் என முதலமைச்சர் தனது உரையில் குறிப்பிட்டார். தற்போது உள்ள விதிகளின் படி, கோவில் நிர்வாகங்கள் தங்கள் வருமானத்தை வளர்ச்சி நோக்கங்களுக்காக பயன்படுத்த அரசாங்கத்திடம் அனுமதி பெற வேண்டும்.

கர்நாடகா மாநிலத்தில் மொத்தம் 34,563 கோயில்கள் அறநிலையத்துறை கீழ் வருகின்றன. அவை வருவாய் அடிப்படையில் ஏ, பி, சி என வகைப்படுத்தப்பட்டுள்ளன. ஆண்டு வருமானம் 25 லட்சத்திற்கு மேல் உள்ள 207 கோயில்கள் ஏ பிரிவிலும், 5 லட்சம் முதல் 25 லட்சம் வரையிலான 139 கோயில்கள் பி பிரிவிலும், 5 லட்சத்திற்கும் குறைவான வருமானம் கொண்ட 34,217 கோயில்கள் சி பிரிவிலும் வகை படுத்தப்பட்டுள்ளன.

மேலும் தனது உரையில், கர்நாடாகாவில் இருந்து காசி யாத்திரை மேற்கொள்ளும் 30,000 யாதிரீகர்களுக்கு ஒரு நபருக்கு 5,000 ரூபாய் மானியம் அரசால் வழங்கப்படும் என முதல்வர் கூறியுள்ளார். மேலும் குறைந்த கட்டணத்தில் யாத்திரை செல்வதற்கு வசதியாக, கர்நாடகா மாநில சுற்றுலா வளர்ச்சி கழகம் மூலம் பவித்ரா யாத்ரா திட்டம் செயல்படுத்தப்படும் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.