காஷ்மீர் பாஜக தலைவர் ராகேஷ் பண்டிதா பயங்கரவாதிகளால் சுட்டுக்கொலை..

காஷ்மீரின் புல்வாமாவில் டிரால் நகராட்சி கவுன்சிலரும் காஷ்மீர் பாஜக தலைவருமான ராகேஷ் பண்டிதா பயங்கரவாதிகள் தாக்குதலால் சம்பவ இடத்திலேயே பலியானார்.

காஷ்மீரின் டிரால் பகுதியில் உள்ள தனது நண்பரை சந்திக்க காஷ்மீர் பாஜக தலைவர் ராகேஷ் பண்டிதா புதன்கிழமை மாலை சென்றுள்ளார். அப்போது அங்கு பதுங்கி இருந்த 3 பயங்கரவாதிகள் ராகேஷ் பண்டிதாவை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் ராகேஷ் பண்டிதா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மேலும் அவரது நண்பரின் மகள் ஆசிபா முஷ்டக்கும் பலத்த காயம் ஏற்பட்டு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஸ்ரீநகரில் வசித்துவரும் ராகேஷ் பண்டிதா டிரால் நகராட்சி கவுன்சிலர் என்பதால் அவருக்கு இரண்டு பாதுகாப்பு அதிகாரிகள் போடப்பட்டு உள்ளனர். ஆனால் அவர் தனது நண்பரை பார்க்க சென்றபோது பாதுகாப்பு அதிகாரிகள் பண்டிதா உடன் செல்லவில்லை என காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தாக்குதல் நடந்த இடத்தை போலிசாரும் பாதுகாப்பு அதிகாரிகளும் சுற்றி வளைத்துள்ளனர். பயங்கரவாதிகளை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டை நடந்து வருவதாக போலிஸ் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். இந்த தாக்குதல் சம்பவத்திற்கு ஜம்மு காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மற்றும் அரசியல் கட்சியினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்த தாக்குதல் சம்பவத்திற்கு பாஜக செய்தி தொடர்பாளர் அல்தாப் தாக்கூர் கண்டனம் தெரிவித்துள்ளார். நிராயுதபாணியான மக்களை தாக்குவது வீரம் கிடையாது என்றும், இந்த தாக்குதல்கள் பாஜக தலைவர்கள் மக்களுக்கு சேவை செய்வதை தடுக்காது என தாக்கூர் கூறினார்.

மேலும் ஜம்மு காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா மற்றும் ஜம்மு காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் மெகபூபா முப்தி ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறுகையில், இந்த தாக்குதல் ஒரு மனிதாபிமானமற்ற செயல், பாஜக தலைவர் ராகேஷ் பண்டிதா தாக்கப்பட்டது தனக்கு அதிர்ச்சி அளிப்பதாகவும், அவரது குடும்பத்திற்கு தனது ஆழ்ந்த இரங்கல் என கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *