நீண்ட நாட்களுக்கு பிறகு பொது நிகழ்ச்சியில் பங்கேற்ற வடகொரிய அதிபர்..
வடகொரியா தனது 73வது ஆண்டு விழாவை கொண்டாடிய நிலையில் நீண்ட நாட்களாக வெளி உலகிற்கு வராத அதிபர் கிம் ஜாங் உன் 73வது ஆண்டு விழாவை முன்னிட்டு பொதுமக்கள் முன் தோன்றினார். நீண்ட நாட்களுக்கு பின் அதிபரை பார்த்த மக்கள் ஆனந்த கண்ணீர் வடித்தனர்.
நாட்டின் 73வது ஆண்டு விழா இரவு நேரத்தில் வண்ணமயமாக கொண்டாடப்பட்டது. அதிபர் கிம் ஜாங் உன் முன்பை விட உடல் எடை குறைந்து புதிய தோற்றத்துடன் காணப்பட்டார். அவர் இராணுவ மரியாதையை ஏற்றுக்கொண்டு வீரர்களை உற்சாகப்படுத்தினர். மேலும் மூத்த அதிகாரிகளையும் சந்தித்து கை குழுக்கி தனது வாழ்த்துக்களை பறிமாறிக்கொண்டார்.
நாட்டின் பாரம்பரிய நடனத்தையும் பார்வையிட்ட அதிபர் கிம் ஜாங் உன் பொதுமக்களையும் கையசைத்து உற்சாகப்படுத்தினார். மேலும் குழந்தைகளுடனும் கைகுழுக்கி அவர்கள் வழங்கிய பரிசு பொருட்களை ஏற்றுக்கொண்டார். அதிபர் கிம் ஜாங் உன்னுடன் அவரது சகோதரி மற்றும் உயர் இராணுவ அதிகாரிகளும் உடன் இருந்தனர்.
கொரோனா தாக்கத்தினால் பொருளாதார நெருக்கடி வட கொரியாவில் ஏற்பட்டுள்ளது. வடகொரியாவில் இதுவரை எவ்வளவு பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். எவ்வளவு பேர் சிகிச்சையில் உள்ளனர் என தெரியவில்லை. வட கொரியாவில் யாருக்கும் கொரோனா தொற்று இல்லை என அந்நாடு அறிவித்துள்ளது.
இருப்பினும் வடகொரியா முழுவதும் லாக்டவுன் போடப்பட்டுள்ளது. கொரோனா அச்சத்தினால் வடகொரியா வீரர்கள் ஒலிம்பிக்கில் கலந்துகொள்ளவில்லை. இதனால் ஒலிம்பிக் கமிட்டி அடுத்த வருடம் சீனாவில் நடைபெற உள்ள குளிர்கால போட்டியில் கலந்து கொள்ள தடை விதித்துள்ளது.
தடை இருந்தாலும் வீரர்கள் தனிபட்ட முறையில் கலந்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் கடந்த மாதம் வடகொரியாவில் இயற்கை சீற்றமும் அதிக அளவில் இருந்தன. மழையின் தாக்கம் அதிகமாக இருந்ததால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது வட கொரியா.
அதிபர் கிம் ஜாங் உன்னுக்கும் சமீபகாலமாக உடல்நிலை சரியில்லாததால் அவர் வெளியில் தலைகாட்டவில்லை. நீண்ட நாட்களுக்கு பிறகு தற்போது தான் அவர் பொது நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார்