இலங்கை பொருளாதாரத்தை மீட்டெடுக்க நீண்ட கால அடிப்படையில் இந்தியா முதலீடு: இந்திய தூதர்

இலங்கை தற்போது மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள நிலையில், தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் மூலம் இலங்கையி உள்ள துறைகளில் முதலீடு செய்ய இந்தியா திட்டமிட்டுள்ளதாக இலங்கைக்கான இந்திய தூதர் கோபால் பாக்லே தெரிவித்துள்ளார்.

பொருளாதார நெருக்கடியால் இலங்கை மக்கள் 100 நாட்களுக்கும் மேலாக போராட்டம் நடத்தி வரும் நிலையில், சில நாட்களுக்கு முன்பு இலங்கை முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்சே நாட்டை விட்டு வெளியேறினார். இதனை அடுத்து புதிய அதிபராக ரணில் விக்கரமசிங்கவும், பிரதமராக தினேஷ் குணவர்தனவும் தேர்வு செய்யப்பட்டனர்.

ஜனவரி முதல் இந்தியா இலங்கைக்கு சுமார் 4 பில்லியன் டாலர் கடன் உதவி மற்றும் மனிதாபிமான உதவியையும் அளித்துள்ளது. இந்த நிலையில் நீண்ட கால அடிப்படையில் இலங்கையில் இந்தியாவின் தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் முதலீடு செய்ய உள்ளதாக தனியார் செய்தி நிறுவனத்திற்கு இந்திய தூதர் பேட்டி அளித்துள்ளார்.

இதில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, ஹைட்ரோகார்பன்கள், துறைமுகங்கள் மற்றும் உள்கட்டமைப்பு, தகவல் தொழில்நுட்பம், மின்சாரம், விவசாயம், பால், மற்றும் கல்வி உள்ளிட்ட முக்கிய துறைகளில் முதலிடு செய்ய உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் நீண்ட காலமாக நிலுவையில் உள்ள பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திடவும் முயன்று வருவதாக கூறப்படுகிறது.

மேலும் இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) பிணை எடுப்பு தொகைக்கான பேச்சுக்களை எளிதாக்குவதற்காக, மத்திய அரசு செயல்பாட்டு மற்றும் அரசியல் மட்டத்திலும் புதிய அரசாங்கத்துடன் இணைந்து செயல்படும் என கூறியுள்ளார். இலங்கைக்கு முக்கிய வருமானமாக கருதப்பட்ட ஏற்றுமதி, சுற்றுலா மற்றும் வெளிநாடு வாழ் இலங்கையர்கள் பணம் அனுப்புதல் ஆகியவை முற்றிலும் அடிவாங்கியுள்ளன.

இலங்கை தற்போது இயல்பு நிலைக்கு திரும்ப முயற்சிக்கிறது, அதிக முதலீடுகளால் பொருளாதாரம் பலனடையும். இதனால் நாங்கள் இப்போது இலங்கையில் அதிக முதலீடுகளை கொண்டு வருவதை பார்க்கிறோம் என கோபால் பாக்லே தெரிவித்துள்ளார். இரு நாடுகளுக்கும் இடையில் அதிக வர்த்தகம், அதிக முதலீடு மற்றும் அதிக ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக புதிய அரசாங்கத்துடன் இணைந்து செயல்படுபோம் எனவும் கூறியுள்ளார்.

இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல், இலங்கைக்கு உணவு, எரிபொருள், மருந்துகள் மற்றும் பிற அத்தியாவசிய பொருட்களின் தேவைக்காக இந்தியா இலங்கைக்கு 4 பில்லியன் டாலர் உதவி மற்றும் மனிதாபிமான உதவிகளையும் வழங்கியுள்ளது. இந்த மாத தொடக்கத்தில் நேஷனல் தெர்மல் ஃபவர் கார்ப்பரேஷன் லிமிடெட் (NTPC) குழு ஒன்று இலங்கை வந்திருந்தது.

இலங்கை மின்சார சபையின் கூட்டு ஒத்துழைப்பின் கீழ், திரிகோணமலைக்கு அருகில் கிழக்கே இலங்கையின் சம்பூரில் சூரிய மின்சக்தி நிலையத்தை நிறுவுவதற்கு NTPC முடிவு செய்துள்ளது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் தகவல் தொழில்நுட்பம் தவிர மருந்து பொருட்கள் உற்பத்தியிலும் கவனம் செலுத்தப்படும் என தெரிவித்துள்ளார்.

பொருளாதார நிலைமையை சமாளிக்க சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து கடன் தொகையை பெற இந்தியா இலங்கை உடன் இணைந்து செயல்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுடனான இருதரப்பு பேச்சுவார்த்தைகளிலும் இலங்கைக்கு உதவ முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published.