தமிழகத்தில் தலைதூக்கும் விடுதலை புலிகள்.. களத்தில் இறங்கிய NIA..
போலி பாஸ்போர்ட் தொடர்பாக தமிழகத்தில் இலங்கையை சேர்ந்த மூன்று பேர் கைது செய்யப்பட்ட நிலையில் இந்த வழக்கை தற்போது தேசிய புலனாய்வு அமைப்பு (NIA) விசாரணை நடத்தி வருகிறது. விடுதலை புலிகள் அமைப்பை மீண்டும் கட்டமைக்க முயற்சி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் சென்னையில் லெட்சுமணன் மேரி பிரான்சிஸ்கா என்ற இலங்கை பெண்ணை தமிழ்நாடு கியூ பிரிவு காவல்துறை கைது செய்தது. அதேபோல் போலியான இந்திய பாஸ்போர்ட்டுடன் ஶ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் ஏற முயன்ற இலங்கை நபரை போலிசார் மதுரை விமானநிலையத்தில் கைது செய்தனர்.
அதேநேரம் ஸ்பெயின் நாட்டின் போலி பாஸ்போர்ட்டுடன் மற்றொரு இலங்கை நபர் திருச்சி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். இவர்களுக்கு புலிகளுடம் தொடர்பு இருப்பதாக தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது. இந்த வழக்கை தமிழக காவல்துறை விசாரித்து வந்த நிலையில் உள்துறை அமைச்சகத்தின் உத்தரவின் பேரில் ஜனவரி 18 ஆம் தேதி முதல் NIA இந்த வழக்கை கையில் எடுத்துள்ளது.
குற்றம் சாட்டப்பட்ட லெட்சுமணன் மேரி பிரான்சிஸ்கோ, கே பாஸ்கரன், ஜான்சன் சாமுவேல், கெனிஸ்டன் பெர்னாண்டோ மற்றும் எல் செல்லமுத்து ஆகிய ஐந்து பேர் மீது சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டம், பாஸ்போர்ட் சட்டம், வெளிநாட்டினர் திருத்த சட்டம் மற்றும் இந்திய தண்டனை சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து NIA விசாரணை நடத்தி வருகிறது.
முதற்கட்ட விசாரணையில் இலங்கை எலக்ட்ரானிக் டூரிஸ்ட் விசாவில் 2019 டிசம்பரில் இந்தியாவிற்கு வந்துள்ளார் பிரான்சிஸ்கா. பின்னர் தொற்றுநோய் காரணமாக திரும்பி செல்ல முடியாது என கூறி தனது பெயரில் உள்ள எரிவாயு இணைப்பு மற்றும் வாடகை ஒப்பந்தத்தின் விவரங்களை பயன்படுத்தி இந்திய பாஸ்போர்ட்டை பெற்றுள்ளார்.
பின்னர் புலிகளின் பயங்கரவாத நடவடிக்கைகாக மும்பை கோட் கிளையில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் இருந்து பணம் எடுக்க இந்திய பாஸ்போர்ட் மற்றும் போலியான ஆவணங்களை பயன்படுத்தியுள்ளார் என தெரியவந்துள்ளது. விடுதலை புலிகள் தொடர்பாக NIA விசாரிக்கும் இரண்டாவது வழக்கு இதுவாகும்.
முன்னதாக கடந்த ஆண்டு மார்ச் 18 ஆம் தேதி லட்சத்தீவில் உள்ள மினிகோய் கடற்கரையில் இந்திய கடலோர காவல்படையால் இலங்கையை சேர்ந்த ரவிஹன்சி என்ற மீன்பிடி படகில் இருந்து 5 AK-47 துப்பாக்கிகள், ஆயிரகணக்கான 9 MM தோட்டாக்கள் மற்றும் 300 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது.
அந்த படகில் பாகிஸ்தானில் இருந்து இலங்கைக்கு ஆயுதங்களை கடத்தியதாக விடுதலை புலிகளின் முன்னாள் உளவுத்துறை தலைவர் சபேசனை(47) NIA சென்னையில் கைது செய்தது. சபேசனுடன் மேலும் இரண்டு இலங்கையை சேர்ந்த சின்ன சுரேஷ் (35) மற்றும் சௌந்தரராஜன் (25) ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.