ஆப்பிள் விவசாயத்தில் லாபம் பார்க்கும் மகாராஷ்ட்ரா விவசாயி..
குளிர் பிரதேசத்தில் மட்டுமே வளரக்கூடிய ஆப்பிள் மரங்களை வெப்ப மண்டலமான மகாராஷ்ட்ராவில் உள்ள ஒரு விவசாயி ஆப்பிள் விவசாயத்தில் அதிக லாபம் பார்த்து வருகிறார். 27 வயதான சந்திரகாந்த் ஹைலிஸ் மகாராஷ்ட்ரா மாநிலத்தின் அகத்வாடே கிராமத்தை சேர்ந்தவர்.
மகாராஷ்ட்ரா பெரும்பாலும் திராட்சை உற்பத்திக்கு பெயர்பெற்றது. இதனால் அங்கு நிறைய ஒயின் தொழிற்சாலைகள் உள்ளன. சந்திரகாந்த் தனது தந்தையுடன் விவசாயத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். முதலில் மாதுளை, திராட்சை போன்ற பழ வகைகளை பயிரிட்டு வந்துள்ளார். இருப்பினும் மாறுபட்ட காலநிலை, போதுமான நீர் இல்லாதது, அதிகமான மழையால் வெள்ளப்பெருக்கு என அவர் பயிரிட்டுருந்த பயிர்கள் அழிந்து நஷ்டத்தை சந்தித்துள்ளார்.
விவசாயம் மீது ஆர்வம் கொண்ட அவர் காலநிலைக்கு ஏற்ப செடிகளை தேர்வு செய்ய எண்ணினார். அப்போது ஹிமாச்சல் பிரதேசத்தில் ஹரிமேன் என்பவர் வெப்ப மண்டலத்தில் வளரக்கூடிய ஆப்பிள் செடிகளை உருவாக்கி இருப்பதை அறிந்த சந்திரகாந்த் ஹிமாச்சல் சென்று HRMN99 என பெயரிடப்பட்ட அந்த ஆப்பிள் செடிகளை தனது கிராமத்திற்கு வாங்கி வந்தார்.
30 ஆப்பிள் செடிகளை தனது கிராமத்தில் பயிரிட்டு அதனை பராமரித்து வந்துள்ளார். போதிய கால இடைவெளியில் செடிகளுக்கு உரம், உயிர் பூச்சி கொல்லி, தண்ணீர் இட்டு பராமரித்து வந்துள்ளார். அதற்கு பலனாக ஒவ்வொரு செடியும் 6 கிலோ ஆப்பிள் பழங்களை கொடுத்துள்ளது. அதனை சந்திரகாந்த் 150 ரூபாய் விலை வைத்து சந்தையில் விற்றுள்ளார்.
அவரது ஆப்பிள்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதால் ஆப்பிள் செடிகளை மேலும் ஒரு ஏக்கருக்கு நடவு செய்ய முடிவு செய்துள்ளார். இதே போன்று புதுச்சேரியை சேர்ந்த ஸ்ரீலட்சுமி என்ற பெண் வெப்ப மண்டலத்தில் விளையும் ஆப்பிள் மரங்களை உருவாக்கி சாதனை படைத்துள்ளார்.
பொதுவாக ஆப்பிள் மரங்கள் ஜம்மு காஷ்மீர், ஹிமாச்சல் பிரதேசம், ஊட்டி, கொடைக்கானல் போன்ற குளிர் பிரதேசங்களில் மட்டுமே வளரக்கூடியது. அப்படியே மற்ற இடங்களில் வளர்ந்தாலும் அதன் சுவை மற்றும் தரம் மாறுபட்டிருக்கும். ஆனால் HRMN99 ஆப்பிள் குளிர் பிரதேசத்தில் விளையும் ஆப்பிளின் அதே சுவை மற்றும் தரத்துடன் வெப்ப மண்டலங்களில் விளைவிக்க முடியும்.