மணிப்பூரில் இராணுவ முகாமில் மிகப்பெரிய நிலச்சரிவு.. 6 வீரர்கள் உயிரிழப்பு.. 50க்கும் மேற்பட்டோர் காணவில்லை..

மணிப்பூரின் நோனியில் உள்ள ராணுவ முகாம் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 6 பேர் உயிரிழந்துள்ளனர். 13 பேர் மீட்கப்பட்ட நிலையில், 50 க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜூன் 29-30 இடைப்பட்ட நள்ளிரவு நேரத்தில், மணிப்பூர் மாநிலம் நோனி மாவட்டம் துபுல் ரயில் நிலையம் அருகே நிலை கொண்டிருந்த இந்திய இராணுவ 107 டெரிடோரியல் ஆர்மியின் முகாமில் ஏற்பட்ட நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் இதுவரை 13 பேர் மிட்கப்பட்ட நிலையில், 6 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

மேலும் 50 க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளன. மணிப்பூரில் ஜிரிபாமில் இருந்து இம்பால் வரை ரயில் பாதை அமைக்கப்பட்டு வரும் நிலையில் பாதுகாப்பிற்காக மணிப்பூரின் நோனி மாவட்டத்தில் உள்ள துபுல் ரயில் நிலையம் அருகே இந்திய இராணுவம் நிறுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இன்று அதிகாலை 107 பிராந்திய இராணுவத்தின் இருப்பிடத்தில் மிகப்பெரிய நிலச்சரிவு ஏற்பட்டது. இதனையடுத்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. காயமடைந்த வீரர்கள் அனைவரும் நோனி இராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

படுகாயமடைந்தவர்களை வெளியேற்றும் பணி நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவும், குழந்தைகள் ஆற்றின் அருகே செல்லாமல் பார்த்து கொள்ளவும், நோனி துணை ஆணையர் அறிவுறுத்தியுள்ளார். NH-37 சாலையில் தடைகள் இருப்பதால் பயணத்தை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மணிப்பூர் முதலமைச்சர் தனது ட்விட்டர் பக்கத்தில், துப்புல் மண்சரிவு நிலைமையை மதிப்பிடுவதற்காக இன்று அவசர கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தேடுதல் மற்றும் மீட்பு பணி ஏற்கனவே நடந்து வருகிறது. அவர்களை இன்று நமது பிரார்த்தனையில் வைப்போம். அறுவை சிகிச்சைக்கு உதவ டாக்டர்களும் ஆம்புலன்ஸ்களும் அனுப்பப்பட்டுள்ளன என கூறியுள்ளார்.

நிலச்சரிவு காரணமாக இஜாய் ஆற்றின் ஓட்டம் பாதிக்கப்பட்டுள்ளது. புதிய நிலச்சரிவு மற்றும் மோசமான வானிலை காரணமாக மீட்பு பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளது. மணிப்பூர் முதல்வருடன் உள்துறை அமைச்சர் அமித்ஷா தொலைபேசியில் பேசினார். வானிலை சீராகும் வரை ராணுவ ஹெலிகாப்டர்கள் தயார் நிலையில் உள்ளன. NDRF குழு சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.

அமித்ஷா தனது ட்விட்டர் பக்கத்தில், மணிப்பூரில் உள்ள துபுல் ரயில் நிலையம் அருகே நிலச்சரிவு ஏற்பட்டதை அடுத்து மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங் மற்றும் மத்திய அமைச்சர் அஷ்விணி வைஷ்னாவிடம் பேசினேன். மீட்பு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. NDRF குழு சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளது மேலும் இரண்டு குழுக்கள் செல்கின்றன என கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.