அரசு பள்ளியில் தொழுகையில் ஈடுபட்ட முஸ்லிம் மாணவர்கள்.. இந்து அமைப்பினர் பள்ளி முன் போராட்டம்..
கர்நாடகாவின் கோலார் மாவட்டத்தில் உள்ள ஒரு அரசு பள்ளியில் சுமார் இருபது மாணவர்கள் வெள்ளிகிழமை வகுப்பறையில் தொழுகையில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனை அறிந்த இந்து அமைப்புகள் பள்ளியின் முன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கர்நாடகா கோலார் மாவட்டம் முலபாதிலுவில் உள்ள சோமேஸ்வரா பாலய பலே சங்கப்பா அரசு மேல்நிலைப்பள்ளியில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் இஸ்லாமிய மாணவர்கள் தொழுகை நடத்த அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் அனுமதி அளித்துள்ளார். இந்நிலையில் கடந்த வெள்ளிகிழமை இஸ்லாமிய மாணவர்கள் தொழுகை நடத்திய வீடியோ சமூக ஊடகங்களில் வெளியானது.
இதனை அடுத்து இந்து அமைப்புகள் பள்ளி முன் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தை அடுத்து பள்ளியின் செயல்பாடுகள் குறித்து விசாரணை நடத்தி விரிவான அறிக்கை தாக்கல் செய்ய கோலார் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மேலும் இந்த பிரச்சனை தொடர்பாக பொதுகல்வித்துறை இணை இயக்குனர் ரேவண சித்தப்பா பள்ளிக்கு நேரில் சென்று விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
தொழுகையில் ஈடுபட்ட மாணவர் ஒருவர் கூறுகையில், இரண்டு மாதங்களுக்கு முன்பு பள்ளி திறக்கப்பட்டதில் இருந்து தொழுகையில் ஈடுபட்டு வருவதாகவும், இதற்கு தலைமை ஆசிரியர் அனுமதி அளித்ததாக மாணவர் கூறியுள்ளார். இதுபற்றி செய்தியாளர்கள் தலைமை ஆசிரியர் உமா தேவியிடம் கேட்டபோது, இதுபற்றி எனக்கு எதுவும் தெரியாது, மாணவர்களே தொழுகையில் ஈடுபட்டனர். தொழுகையில் ஈடுபட்டபோது நான் பள்ளியில் இல்லை. வெளியில் இருந்தேன், அப்போது தீபா மேடத்திடம் இருந்து எனக்கு போன் வந்தது.
மாணவர்கள் தொழுகையில் ஈடுபடுவதாக அவர் என்னிடம் கூறினார். நான் உடனடியாக பள்ளிக்கு சென்றேன். எனக்கு தெரியாமல் இது நடந்து விட்டது. இனி நடக்காமல் பார்த்து கொள்கிறேன் என கூறியுள்ளார். இந்த நிலையில் பள்ளி தலைமை ஆசிரியல் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட கல்வி அலுவலர் கிரிஜேஸ்வரா தேவி உறுதியளித்துள்ளார். இந்த பிரச்சனை குறித்து விசாரணை நடத்த திங்கள் கிழமை ஒரு குழு பள்ளிக்கு அனுப்பப்படும் என பள்ளி கல்வித்துறை கூறியுள்ளது.
இதுகுறித்து மாவட்ட கல்வி அலுவலர் கிரிஜேஸ்வர தேவி கூறுகையில், பள்ளி வளாகத்தில் தொழுகை நடத்த மாணவர்களுக்கு சலுகையோ, அனுமதியோ வழங்கப்படவில்லை. இது அப்பட்டமான விதிமீறல், தலைமை ஆசிரியர் ஏன் அனுமதித்தார் என தெரியவில்லை, பிரச்சனை குறித்து விசாரிக்க ஒரு குழு அனுப்பப்படும். அதன் பிறகு அறிக்கை தாக்கல் செய்யப்படும் என கூறினார்.
சோமேஸ்வரா அரசு பள்ளியில் 400 மாணவர்கள் படித்து வருகின்றனர். அவர்களில் 150 மாணவர்கள் இஸ்லாம் சமூகத்தை சேர்ந்தவர்கள். ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் முஸ்லிம் மாணவர்கள் தொழுகை நடத்த மதிய வேளையில் பள்ளியை விட்டு உள்ளுர் மசூதிக்கு செல்வதாகவும், அப்படி செல்லும் மாணவர்கள் திரும்பி பள்ளிக்கு வருவதில்லை. இதனால் தலைமை ஆசிரியர் அவர்கள் பள்ளியை விட்டு செல்லாமல் இருக்க பள்ளியிலேயே தனி வகுப்பறையில் தொழுகை நடத்த தலைமை ஆசிரியர் அனுமதி கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.