கிரிப்டோ கரன்சி தொடர்பாக மத்திய அரசுக்கும் கிரிப்டோ பிரதிநிதிகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை.
இந்தியாவில் தற்போது கிரிப்டோ கரன்சியில் அதிக இந்தியர்கள் முதலீடு செய்வதால் அதுகுறித்து விவாதிக்க அரசு மற்றும் கிரிப்டோ கரன்சி துறைகளை சார்ந்த வல்லுநர்களுடன் முதன்முறையா அதிகாரபூர்வ சந்திப்பு நடைபெற உள்ளது.
தற்போது இந்தியாவில் நாளுக்கு நாள் கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது. கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்ய வேண்டாம் என ரிசர்வ் வங்கி எச்சரித்தது.
உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் கிரிப்டோ கரன்சியை தடை விதிக்க மறுத்துவிட்டது. இதனால் டிஜிட்டல் கரன்சியை பயன்படுத்துவது தொடர்பாக முறையான வழிமுறைகளை செயல்படுத்த இன்று அரசு மற்றும் டிஜிட்டல் கரன்சி வல்லுநர்களுக்கிடையே கூட்டம் நடைபெற உள்ளது.
இந்த கூட்டத்திற்கு பாஜகவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயந்த் சின்ஹா தலைமை தாங்குகிறார். கிரிப்டோ பங்குதாரர்களுக்கும் அரசுக்கும் இடையிலான முதல் சந்திப்பு இதுவாகும். கிரிப்டோ கரன்சியை பயன்படுத்துவது தொடர்பாக இன்னும் மத்திய அரசு சார்பில் முறையான நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
கிரிப்டோ பைனான்ஸ் என்ற தலைப்பில் இந்த கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் கிரிப்டோ கரன்சியில் உள்ள சாதகம், வாய்ப்புகள் மற்றும் சவால்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. இந்த கூட்டத்தில் இந்தியா இன்டர்நெட் அன்ட் மொபைல் அசோஷேசியேசன் மற்றும் பிளாக்செயின் மற்றும் கிரிப்டோ அசெட்ஸ் கவுன்சில் ஆகியவற்றின் பிரதிநிதிகள் கலந்துகொள்ள உள்ளனர்.
கடந்த சனிக்கிழமை அன்று பிரதமர் மோடி தலைமையில் கிரிப்டோ கரன்சி தொடர்பாக கூட்டம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து தற்போது இந்த கூட்டம் நடைபெற உள்ளது. இந்தியாவில் கிரிப்டோ கரன்சிக்கு ஆதரவு மற்றும் எதிர்ப்பு என இரண்டுமே உள்ளது. ஆனால் கிரிப்டோ கரன்சியை யார் கட்டுப்படுத்துகிறார்கள் என தெரியாது. இதனால் இது குறித்து முடிவு எடுக்க இந்த கூட்டம் நடைபெறுகிறது.