சீனா எல்லையை மூடியதால் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் நேபாளம்..

நேபாளத்திற்கு எதிராக சீனா விதித்துள்ள அறிவிக்கப்படாத தடை காரணமாக இரு நாடுகளுக்கு இடையேயான சரக்கு ஏற்றுமதி போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. இதனால் பொருட்களை ஏற்றுமதி செய்ய முடியாமல் நேபாள் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நேபாளில் இருந்து சீனாவிற்கு செல்லும் ரசுவாகதி மற்றும் டடோபனி வழித்தடத்தை சீனா முடக்கியுள்ளது. இதற்கு கொரோனா பரவலை சீனா காரணம் கூறியுள்ளது. இதனால் நேபாளத்தில் இருந்து தினமும் இரண்டு அல்லது மூன்று சரக்கு லாரிகளை மட்டுமே அனுமதிக்கிறது.

2015 ஆம் ஆண்டு நிலநடுக்கத்திற்கு பிறகு டடோபானி வழித்தடம் சுமார் 4 ஆண்டுகள் மூடப்பட்டது. பின்னர் திறக்கப்பட்டாலும் கொரோனாவை காரணம் காட்டி மீண்டும் மூடப்பட்டது என நேபாள டிரான்ஸ் ஹிமாலயன் பார்டரின் தலைவர் அசோக் ஷ்ரேஷ்டா கூறியுள்ளார்.

கடந்த 16 மாதங்களாக கெருங் மற்றும் டடோபானி எல்லையில் குறைந்தபட்சம் 300 சரக்கு லாரிகள் சிக்கியுள்ளதாக கூறியுள்ளார். மேலும் எல்லையில் இருந்து பொருட்களை எளிதாக இறக்குமதி செய்யவும் ஏற்றுமதி செய்யவும் சீனா ஏற்பாடு செய்ய வேண்டும் என அசோக் கோரிக்கை விடுத்துள்ளார்.

சரக்கு லாரிகள் தேங்கியுள்ளதால் கடந்த இரண்டு வருடங்களாக சீனா உடனான வர்த்தகம் குறைந்துவிட்டதாகவும், இதனால் வர்த்தகர்கள் பெரும் நஷ்டத்திற்கு ஆளாகியுள்ளதாகவும் அசோக் தெரிவித்துள்ளார். மேலும் சீன அரசாங்கம் நேபாள வர்த்தகர்களுக்கு விசா வழங்காததால் சீனாவில் இருந்து எந்த ஆர்டரும் கிடைக்கவில்லை என கூறியுள்ளார்.

சரக்கு லாரிகள் எல்லை வழியாக நேபாளத்தை அடைய இரண்டு வாரங்கள் ஆகும் நிலையில் தற்போது எல்லை மூடப்பட்டதால் சீன பொருட்கள் இந்திய துறைமுகங்கள் வழியாக இந்திய எல்லையை அடைய மூன்று மாதங்கள் ஆவதாக அசோக் கூறியுள்ளார்.

நேபாளத்தின வர்த்தக மற்றும் ஏற்றுமதி மேம்பாட்டு மையத்தின்படி, நேபாளத்திற்கான சீன இறக்குமதி 2019-20 ஆம் ஆண்டில் 17.6 சதவீதத்தில் இருந்து தற்போது 3 சதவீத வீழ்ச்சியுடன் 14.6 சதவீதமாக குறைந்துள்ளது. அதேநேரம் சீனாவுக்கான நேபாள ஏற்றுமதி 2019-20 ஆம் ஆண்டுகளில் 1.8 சதவீதத்தில் இருந்து தற்போது 0.4 சதவீதமாக வீழ்ச்சி அடைந்துள்ளது. சீனா நேபாளத்திற்கு மின்னணு பொருட்கள் மற்றும் ஆடைகளை ஏற்றுமதி செய்கிறது. நேபாளம் சீனாவிற்கு தரைவிரிப்புகள், கைவினை பொருட்கள் மற்றும் பாரம்பரிய பொருட்களை ஏற்றுமதி செய்கிறது.

Leave a Reply

Your email address will not be published.