பறக்க தகுதியற்ற 5 சீன விமானங்களை விற்பனை செய்ய உள்ள நேபாளம்..

பெரும் இழப்புகளை சந்தித்து வருவதால் சீனாவிடம் இருந்து வாங்கிய ஐந்து பயணிகள் விமானத்தை நேபாளம் ஏர்லைன்ஸ் விற்பனை செய்ய உள்ளது.

கடந்த 2012 ஆம் ஆண்டு நேபாள ஏர்லைன்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனம் சீன அரசாங்க நிறுவனமான ஏவியேஷன் இண்டஸ்ட்ரிஸ் கார்ப்பரேஷன் ஆப் சைனா உடன் வணிக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. அதில் நான்கு Y12E மற்றும் இரண்டு MA60 ஆகிய விமானங்கள் வாங்க ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

அதே நேரம் விமானத்தை வாங்க சீனா 408 மில்லியன் சீன யுவான் மதிப்பிலான மானியம் மற்றும் சலுகையை வழங்கியது. முதலில் ஓரு Y12E மற்றும் ஒரு MA60 விமானத்தை வாங்க 180 மில்லியன் யுவான் மானியம் செலுத்தப்பட்டது. பின்னர் மற்ற 5 விமானங்களுக்கு சீனாவின் EXIM வங்கி 228 மில்லியன் யுவான் கடன் வழங்கியது.

விமானம் 2014 ஆம் ஆண்டு சேவையில் நுழைந்தது முதல் நஷ்டத்தை சந்தித்து வருவதாக கூறப்படுகிறது. ஒரு விமானம் விபத்தில் இயங்காத நிலையில் மீதமுள்ள 5 விமானங்கள் திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. பராமரிப்பு சிக்கல்கள், உதிரி பாகங்கள் இல்லாதது மற்றும் அந்த விமானத்தை இயக்க விமானி கிடைக்காதது என பல பிரச்சனைகள் இருப்பதால் நஷ்டம் அதிகரித்து கொண்டே வருகிறது.

விமானத்தை அந்நிறுவம் குத்தகைக்கு விட முயன்றும் அவற்றை யாரும் குத்தகைக்கு எடுக்க விரும்பவில்லை. இந்த நிலையில் அவற்றை வரும் விலைக்கு விற்பனை செய்ய நேபாள நிதி அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. இந்த 5 விமானங்களும் 2020 ஆம் ஆண்டு முதல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

தற்போது விமானம் இயங்காத நிலையில் அதற்காக வாங்கிய கடனுக்கான வட்டியை நேபாள ஏர்லைன்ஸ் செலுத்தி வருகிறது. இதனால் மேலும் நஷ்டம் அதிகரித்துள்ளதாலும், விமானங்கள் பறக்க தகுதியற்றதாலும் அவற்றை விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.