கன்ஹையா லால் கொலை வழக்கில் தொடர்புடைய ஏழாவது நபரை கைது செய்த NIA..

நுபுர் சர்மாவிற்கு ஆதரவு தெரிவித்ததற்காக படுகொலை செய்யப்பட்ட உதய்பூர் கன்ஹையா லால் கொலையில் தொடர்புடைய ஏழாவது நபரை சனிக்கிழமை தேசிய புலனாய்வு அமைப்பினர் கைது செய்துள்ளனர்.

தேசிய புலனாய்வு அமைப்பு (NIA) வெளியிட்டுள்ள அறிக்கையில், கைது செய்யப்பட்ட நபர் உதய்பூரை சேர்ந்த 31 வயதான ஃபர்ஹாத் முகமது ஷேக் ஆவார். கன்ஹையா லால் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளிகளில் ஒருவரான ரியாஸ் அட்டாரியின் நெருங்கிய கூட்டாளி எனவும், கன்ஹையா லாலை கொலை செய்யும் சதித்திட்டத்தில் தீவிரமாக பங்கேற்றவர் எனவும் NIA தெரிவித்துள்ளது.

முன்னதாக கொலை நடந்த சில மணி நேரங்களில் குற்றவாளிகளான ரியாஸ் அட்டாரி மற்றும் கவுஸ் முகமது ஆகியோர் கைது செய்யப்பட்டனர். பின்னர் ஜூன் 30 ஆம் தேதி ஆசிப் மற்றும் மொஹ்சின் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். ஜூலை 6 ஆம் தேதி முகமது மொஹ்சின் மற்றும் ஜூலை 8 ஆம் தேதி வாசிம் அலி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இந்த நிலையில் நேற்று ஏழாவது குற்றவாளியான பர்ஹாத் முகமது ஷேக் கைது செய்யப்பட்டுள்ளார். ஜூன் 28 அன்று கன்ஹையா லால் படுகொலை செய்யப்பட்ட பிறகு, ஜூன் 29 அன்று இந்த வழக்கை ராஜஸ்தான் காவல்துறையிடம் இருந்து தேசிய புலனாய்வு அமைப்பினர் எடுத்து கொண்டனர். பின்னர் இந்த வழக்கை UAPA சட்டத்தின் கீழ் NIA பதிவு செய்தது.

குற்றவாளிகள் மீது இந்திய தண்டனை சட்டம் (IPC) பிரிவு 452, 302, 153 (A), 153 (B) மற்றும் UAPA 1967 பிரிவுகள் 16, 18 மற்றும் 20 ஆகியவற்றின் கீழ் தேசிய புலனாய்வு அமைப்பினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். முன்னதாக கன்ஹையா லாலின் மகனுக்கு அரசு வேலை வழங்க ராஜஸ்தான் அமைச்சரவை முடிவு செய்து, நியமனத்திற்கான விதிகளில் தளர்வு கொடுத்துள்ளது.

இந்த கொடூர சம்பவத்தால் கன்ஹையா லாலின் குடும்பத்தினருக்கு வேறு வாழ்வாதாரம் இல்லை, அவரது குடும்பத்தினருக்கு பணி நியமனம் வழங்கினால் அவர்களது வாழ்வாதாரம் சுமூகமாக செல்லும், குடும்பம் பொருளாதார மற்றும் மன பலம் பெறும் என ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.