மிசோரமில் உள்ள மியான்மர் அகதிகளின் எண்ணிக்கை 30,000 தாண்டியது..?

மியான்மரில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் இராணுவம் ஆட்சியை கைப்பற்றிய நிலையில், இதுவரை இந்தியாவிற்கு 30,000 க்கும் மேற்பட்டோர் அகதிகளாக தஞ்சமடைந்துள்ளதாக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு பிப்ரவரியில் இராணுவம் ஆட்சியை கைப்பற்றியதை அடுத்து, 11,798 குழந்தைகள், 10,047 பெண்கள் உட்பட மொத்தம் 30,316 மியான்மர் நாட்டவர்கள் மிசோரமின் பல்வேறு பகுதிகளில் அகதிகளாக தஞ்சமடைந்துள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். தஞ்சமடைந்தவர்களில் 14 சட்டமன்ற உறுப்பினர்களும் அடங்குவர் என அவர் தெரிவித்துள்ளார்.

தஞ்சமடைந்தவர்களின் 30,316 பேரில் 30,299 பேரின் விவரக்குறிப்புகள் முடிக்கப்பட்டுள்ளது. அதிகாரி மேலும் கூறுகையில், 30,000க்கும் மேற்பட்ட அகதிகளுக்கு, அந்த நபர் ஒரு அகதி என சான்றளிக்கும் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளன.

மாநில அரசால் வழங்கப்படும் இந்த அட்டை, மிசோரமில் அடையாள நோக்கங்களுக்காக மட்டுமே பயன்படுத்தப்பட முடியும். அதாவது அவர் மியான்மர் நாட்டை சேர்ந்தவர் என்பதற்காக மட்டுமே அடையாள அட்டையை பயன்படுத்த முடியும். அரசாங்க திட்டங்களை பெற இந்த அட்டையை பயன்படுத்த முடியாது.

அந்த அடையாள அட்டையில், இது அடையாளம் காண்பதற்காக மட்டுமே மற்றும் வேறு எந்த நோக்கத்திற்காகவும் இது உதவாது. இது மாற்றக்கூடியது அல்ல, என அந்த அடையாள அட்டையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதிகாரியின் கூற்றுப்படி, மிசோரமில் குறைந்தபட்சம் 156 தற்காலிக நிவாரண முககாம்கள் அரசாங்கம், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், கிராம அதிகாரிகள் மற்றும் மியான்மர் நாட்டினரால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ளது.

மிசோரமின் சியாஹா மாவட்டத்தில் அதிகபட்சமாக 41 தங்குமிடங்களும், லாங்ட்லாய் மாவட்டத்தில் 36 தங்குமிடங்களும் மற்றும் சம்பை மாவட்டத்தில் 33 தங்குமிடங்களும் அமைக்கப்பட்டுள்ளன. இவர்களுக்கு நிவாரணமாக அரசு இதுவரை 80 லட்சம் ரூபாய் அனுமதித்துள்ளதாக கூறப்படுகிறது. மியான்மர் அகதிகள் யாரும் இதுவரை சட்டம் ஒழுங்கு பிரச்சனையில் ஈடுபடவில்லை என அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

மிசோரமின் சம்பாய், சியாஹா, லாங்ட்லாய், செர்ச்சிப், ஹ்னாதியால் மற்றும் சைட்டுவல் ஆகிய 6 மாவட்டங்கள் மியான்மரின் சின் மாநிலத்துடன் 510 கிலோமீட்டர் நீள சர்வதேச எல்லையை பகிர்ந்து கொள்கின்றன. பெரும்பாலான மியான்மர் அகதிகள் சின் மாநிலத்தை சேர்ந்தவர்கள். மேலும் அவர்கள் மிசோர வம்சாவளியினர் என கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published.