பாதுகாப்பு மற்றும் அணுசக்தி துறையில் இந்தியாவால் மட்டுமே உதவ முடியும்: வியட்நாம்

பாதுகாப்பு மற்றும் அணுசக்தி போன்ற முக்கியமான துறைகளில் இந்தியாவால் மட்டுமே வியட்நாமுக்கு உதவ முடியும் என இந்தியாவுக்கான வியட்நாம் தூதர் பாம் சான் சாவ் கூறியுள்ளார்.

வணிகர்களின் வர்த்தக மற்றும் தொழிற்துறை கூட்டத்தில் பேசிய இந்தியாவுக்கான வியட்நாம் தூதர் பாம் சான் சாவ், வியட்நாம் அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் உரையாடல் போன்றவற்றில் இந்தியாவுடன் சுமூகமான உறவை கொண்டுள்ளது. அனைத்து நாடுகளும் வியட்நாமுடன் நட்பாக உள்ளன. ஆனால் நாங்கள் சில நாடுகளுடன் மிகவும் சுமூகமான உறவை கொண்டுள்ளோம், அவற்றில் இந்தியாவும் ஒன்று என சாவ் கூறினார்.

வியட்நாமும் இந்தியாவும் புத்தரின் பாதையான அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் உரையாடலின் நடுவழியை தேர்ந்தெடுத்துள்ளன, பாதுகாப்பு மற்றும் அணுசக்தி தொழிற்நுட்பம் போன்ற துறைகளில் ஒத்துழைப்புக்காக வியட்நாம் இந்தியாவின் உதவியை நோக்குவதாக சாவ் கூறினார்.

அமைதியான பயன்பாட்டிற்காக பாதுகாப்பு மற்றும் அணுசக்தி தொழிற்நுட்பம் போன்ற முக்கியமான துறைகளில் வியட்நாமுக்கு இந்தியா மட்டுமே உதவ முடியும். மற்றவர்கள் அத்தகைய தொழிற்நுட்பங்களை பகிர்ந்து கொள்ள மாட்டார்கள் என சாவ் கூறியுள்ளார். கடந்த மாதம் இந்தியா மற்றும் வியட்நாம் இடையே இராஜதந்திர உறவுகளை நிறுவியதன் 50வது ஆண்டு விழா கொண்டாடப்பட்டது.

பிரதமர் நரேந்திர மோடியும், வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் நகுயென் புட்ரோங்கும் தொலைபேசியில் உரையாடினர். உக்ரைன் மற்றும் தென்சீனக்கடல் தவிர, பொருளாதாரம், வர்த்தகம் மற்றும் பாதுகாப்பு துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்த இருநாட்டு தலைவர்களும் ஒப்புக்கொண்டனர்.

இந்தியா மற்றும் வியட்நாம் இடையேயான இருதரப்பு வர்த்தகம் 2021ல் 13.2 பில்லியன் டாலரில் இருந்து 2023ல் 15 பில்லியன் டாலராக எட்டும் என எதிர்பார்ப்பதாக சாவ் கூறியுள்ளார். மேலும் இந்தியாவுக்கான வியட்நாம் ஏற்றுமதிகள் உயர்ந்துள்ளதாகவும். வர்த்தக பற்றாக்குறை இருநாடுகளுக்கும் இடையே சமமான பங்கை கொண்டிருப்பதாக சாவ் கூறியுள்ளார்.

இந்திய மருத்துவதுறையை மேலும் விரிவாக்க வியட்நாம் ஒரு சிறந்த வாய்ப்பை வழங்குகிறது. இந்திய நிறுவனங்கள் ஜவுளி மற்றும் ஆடைகள், தகவல் தொழிற்நுட்பம், ரியல் எஸ்டேட், விவசாய பொருட்கள், பொது வர்த்தகம், சுகாதாரம், மின் மற்றும் மின்னணு தொழிற்நுட்ப உபகரணங்கள், கல்வி மற்றும் சூரிய தொழிற்நுட்பம் போன்ற துறைகளில் முதலீடு செய்ய வாய்ப்புள்ளதாக சாவ் கூறினார்.

Also Read: Su-30MKI விமானத்தில் இருந்து வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்ட பிரம்மோஸ்..!

இந்திய நிறுவனங்களான டாடா காஃபி, பேங்க் ஆப் இந்தியா, கோத்ரேஜ், விப்ரோ, டெக் மகேந்திரா, ONGC. HCL டெக்னாலஜிஸ் மற்றும் Marico ஆகிய நிறுவனங்கள் ஏற்கனவே வியட்நாமில் இயங்கி வரும் நிலையில், புதிதாக கார் வாடகை நிறுவனமாக ஜூம் கார் மற்றும் ஆன்லைன் உயர் கல்வி நிறுவனமாக அப்கிரேடு ஆகியவை வியட்நாம் சந்தையில் நுழைந்துள்ளதாக கூறியுள்ளார்.

நாட்டின் சிறிய அளவு மற்றும் நீண்ட கடற்கரை காரணமாக, அனைத்து தொழில் பூங்காக்களிலிருந்தும் சுமார் அரை மணி நேரத்திற்குள் துறைமுகங்களை அணுக முடியும். மேலும் வியட்நாம் 15 நாடுகளுடன் சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்களை கொண்டுள்ளது. மற்ற 14 நாடுகளுடன் RCEP கூட்டமைப்பில் உள்ளது.

Also Read: 1000 கோடி மதிப்பில் எதிரி இலக்கை கண்டறியும் ஸ்வாதி ரேடாரை வாங்க உள்ள இந்திய இராணுவம்..?

RCEP என்பது சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்களை கொண்ட நாடுகளுக்கு இடையேயான பிராந்திய வர்த்தக ஒப்பந்தமாகும். இந்த கூட்டமைப்பில் ஆஸ்திரேலியா, வியட்நாம், சிங்கப்பூர், தாய்லாந்து, மியான்மர், நியூசிலாந்து, பிலிப்பைன்ஸ், மலேசியா, லாவோஸ், தென்கொரியா, ஜப்பான், இந்தோனேசியா, சீனா, புருனே மற்றும் கம்போடியா ஆகியநாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இந்த கூட்டமைப்பு மூலம் சீனாவின் பொருட்கள் இந்தியாவில் குவிய வாய்ப்புள்ளதால் இதில் இந்தியா சேரவில்லை.

Also Read: ஜம்முவின் செனாப் ஆற்றில் நீர்மின்நிலைய கட்டுமானத்திற்கு பாகிஸ்தான் எதிர்ப்பு..

Leave a Reply

Your email address will not be published.