சீனாவில் தயாரிக்கப்பட்ட அதிநவீன போர் விமானத்தை படையில் இணைத்த பாகிஸ்தான்..?

பாகிஸ்தான் சீனாவிடம் இருந்து வாங்கிய J-10C மல்டி ரோல் போர் விமானத்தை வெள்ளிக்கிழமை முறைப்படி விமானப்படையில் இணைத்தது. இந்த போர் விமானத்தை அறிமுகம் செய்யும் நிகழ்ச்சி பஞ்சாப் மாநிலம் அட்டாக் மாவட்டத்தில் உள்ள மின்ஹால் கம்ரா விமானப்படை தளத்தில் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்டு பேசிய இம்ரான்கான், மறைமுகமாக இந்தியாவை குறிப்பிட்டு, துரதிர்ஷ்டவசமாக பிராந்தியத்தில் ஏற்றத்தாழ்வை உருவாக்க முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. இவற்றை நிவர்த்தி செய்ய நாம் இப்போது ஒரு மிகப்பெரிய போர் விமானப்படையை நமது விமானப்படையில் இணைத்துள்ளோம்.

சுமார் 40 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவால் வழங்கப்பட்ட F-16 போர் விமானத்தை அறிமுகப்படுத்தப்பட்ட போது முழு தேசமும் மகிழ்ச்சியில் இருந்தது. தற்போது மீண்டும் அந்த நேரம் வந்துவிட்டது. இந்த பிராந்தியத்தில் ஏற்ற தாழ்வுகளை ஏற்படுத்த முயற்சி நடந்தாலும் J-10C போர் விமானம் மீண்டும் ஒரு சமநிலையை உருவாக்கியுள்ளது.

நவீன போர் விமானங்களை வாங்குவதற்கு பல ஆண்டுகள் ஆகும் போது, சுமார் எட்டு மாத குறுகிய காலத்தில் விமானத்தை வழங்கியதற்காக இம்ரான்கான் சீனாவுக்கு நன்றி தெரிவித்தார். இனி எந்த ஒரு நாடும் ஆக்கிரமிப்பில் ஈடுபடும் முன் இருமுறை யோசிக்க வேண்டும் என இந்தியாவை மறைமுகமாக இம்ரான்கான் குறிப்பிட்டார்.

விமானப்படை தலைவர் ஏர் சீஃப் மார்ஷல் ஜாகீர் அகமது பாபர் சித்து கூறுகையில், J-10C ஒரு முழுமையான ஒருங்கிணைந்த ஆயுதம், ஏவியோனிக் மற்றும் போர் அமைப்பு என குறிப்பிட்டார். இந்த போர் விமானத்தில் JF-17 பிளாக் 3 பயன்படுத்தியதை விட பெரிய ஆக்டிவ் எலக்ட்ரானிக் ஸ்கேன் செய்யப்பட்ட ரேடார் பொருத்தப்பட்டுள்ளது.

J-10C ஆனது 4.5 ஆம் தலைமுறை போர் விமானம் ஆகும். சீனா பாகிஸ்தான் இணைந்து உருவாக்கிய இலகுரக போர் விமானமான JF-17 யை விட சக்தி வாய்ந்தது. இந்த மாதம் மார்ச் 23 அன்று பாகிஸ்தான் தின விழா கொண்டாடப்பட உள்ள நிலையில் அன்று அனைத்து J-10C போர் விமானங்களும் கலந்து கொள்ளும் என விமானப்படை தலைவர் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானில் அமெரிக்க தயாரிப்பாக F-16 போர் விமானங்கள் இருந்த நிலையில், இந்தியா பிரான்ஸிடம் இருந்தது 59,000 கோடி ரூபாய் மதிப்பில் 36 ரபேல் போர் விமானங்களை வாங்க ஒப்பந்தம் மேற்கொண்டது. இந்த நிலையில் அனைத்து போர் விமானங்களும் ஏறக்குறைய இந்தியா வந்தடைந்து விட்டன. இந்த ரபேல் போர் விமானம் சீனாவின் ஐந்தாம் தலைமுறை விமானத்துடன் ஒப்பிடும் போது மேம்பட்டது என கூறப்படுகிறது. நான்காம் தலைமுறை போர் விமானத்தை தான் சீனா ஐந்தாம் தலைமுறை போர் விமானம் என கூறுவதாக குற்றசாட்டும் உள்ளது.

Leave a Reply

Your email address will not be published.