2023 குடியரசு தின சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள எகிப்து அதிபருக்கு பிரதமர் மோடி அழைப்பு..?
ஜனவரி 26 ஆம் தேதி நடைபெற உள்ள குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக எகிப்து அதிபர் அப்தெல் ஃபத்தா அல்-சிசி கலந்துகொள்ள உள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த மாதம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் எகிப்து நாட்டிற்கு பயணம் மேற்கொண்டார். அப்போது பிரதமர் நரேந்திர மோடி அல்-சிசிக்கு ஒரு முறையான அழைப்பை அனுப்பியிருந்தார். இந்த அழைப்பை வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் எகிப்து அதிபரிடம் ஒப்படைத்தார்.
கொரோனா தொற்று காரணமாக 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டு சிறப்பு விருந்தினர்கள் யாரும் அழைக்கப்படடிவில்லை. 2021 ஆம் ஆண்டு சிறப்பு விருந்தினராக இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் கலந்து கொள்வதாக இருந்தது. ஆனால் கொரோனா தொற்று காரணமாக அது ரத்து செய்யப்பட்டது.
2020 ஆம் ஆண்டு அப்போதைய பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். தற்போது 2023 ஆம் ஆண்டு குடியரசு தின சிறப்பு விருந்தினராக எகிப்து அதிபர் கலந்துகொள்ள உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் குடியரசு தின விழாவில் எகிப்து அதிபர் ஒருவர் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்வது இதுவே முதல்முறை ஆகும்.
இந்தியாவும் எகிப்தும் இந்த ஆண்டு தூதரக உறவுகளை நிறுவியதன் 75வது ஆண்டு விழாவை கொண்டாடுகின்றன. மேலும் டிசம்பர் 1 முதல் இந்தியா ஜி20 கூட்டமைப்பின் தலைமை பொறுப்பை ஏற்க உள்ளது. எகிப்து இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக பங்காளிகளில் ஒருவராக உள்ளது.
கடந்த ஆண்டு 7.2 பில்லியன் டாலருக்கு அதிகமாக வர்த்தகம் நடைபெற்றது. இந்திய நிறுவனங்கள் 3 பில்லியனுக்கும் அதிகமாக எகிப்தில் முதலீடு செய்துள்ளதாக வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும் எகிப்து இந்தியாவின் தேஜஸ் போர் விமானங்களை வாங்க ஆர்வம் தெரிவித்துள்ளது.
மேலும் தேஜஸ் விமான விற்பனையை அதிகரிக்க எகிப்தில் இந்தியா ஒரு உற்பத்தி மையத்தை அமைக்க உள்ளது. மேலும் எகிப்திய விமானப்படை மற்றும் இந்திய விமானப்படைகள் இணைந்து போர் பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. எகிப்தும் இந்தியாவும் நாகரீக மற்றும் ஆழமான நட்புறவை கொண்டுள்ளதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.