மிகவும் அங்கீகரிக்கப்பட்ட உலக தலைவர்கள் பட்டியலில் 70 சதவீத ஆதரவுடன் பிரதமர் மோடி முதலிடம்..
அமெரிக்க ஆராய்ச்சி நிறுவனம் நடத்திய ‘குளோபல் லீடர் அப்ரூவல் ட்ராக்கிங்’ ஆய்வில் பிரதமர் நரேந்திர மோடி 70 சதவீத ஆதரவுடன் முதல் இடத்தில் உள்ளார். அமெரிக்க அதிபர் ஜோ பிடன் மற்றும் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் பின் தங்கியுள்ளனர்.
பிரபல அமெரிக்க தரவு நுண்ணறிவு நிறுவனமான மார்னிங் கன்சல்ட் நிறுவனம் சமீபத்தில் ஒரு ஆய்வை மேற்கொண்டது. இந்த நிறுவனம் ஆன்லைன் கணக்கெடுப்பு ஆராய்ச்சி தொழில்நுட்பத்தில் நிபுணத்துவம் பெற்ற நிறுவனம் ஆகும். சந்தை, பொருளாதாரம் மற்றும் அரசியல் உட்பட பல துறைகளில் ஆய்வை மேற்கொண்டு வெளியிட்டு வருகிறது.
இந்த நிறுவனம் ஆன்லைனில் ‘குளோபல் லீடர் அப்ரூவல் ட்ராக்கிங்’ என்ற பெயரில் சமீபத்தில் ஆய்வை மேற்கொண்டது. அதன் அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ள தரவுகளில் பிரதமர் மோடி 70 சதவீத ஆதரவுடன் முதல் இடத்தில் உள்ளார்.
பிரதமர் மோடியை தொடர்ந்து மெக்சிகோ அதிபர் லோபஸ் ஒப்ரடோர் 66 சதவீத ஆதரவுடன் இரண்டாவது இடத்திலும், இத்தாலி பிரதமர் மரியோ டிராகி 58 சதவீத ஆதரவுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளனர். அடுத்தடுத்த இடங்களில் ஜெர்மனியின் அதிபர் ஏஞ்சலா மெர்கல் 54 சதவீத ஆதரவுடனும், ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் 47 சதவீத ஆதரவுடனும் உள்ளனர்.
Also Read: இந்தியாவில் அடுத்த சில தசாப்தங்களுக்கு பாஜக அசைக்க முடியாத கட்சியாக இருக்கும்: பிரசாந்த் கிஷோர்
அமெரிக்க அதிபர் ஜோ பிடன் 44 சதவீத ஆதரவுடனும், கனடா பிரதமர் ஜஸ்டீன் ட்ரூடோ 43 சதவீத ஆதரவுடனும், ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா 42 சதவீத ஆதரவுடனும், தென்கொரிய அதிபர் மூன் ஜே-இன் 41 சதவீத ஆதரவுடனும், பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் 40 சதவீத ஆதரவுடனும் உள்ளனர்.
ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் 37 சதவீத ஆதரவுடனும், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் 36 சதவீத ஆதரவுடனும், பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ 35 சதவீத ஆதரவுடனும் உள்ளனர். நவம்பர் 4 ஆம் தேதி நிலவரப்படி, 70 சதவீத இந்தியர்கள் பிரதமர் மோடியை ஆதரிப்பதாகவும், 24 சதவீத பேர் மட்டுமே பிரதமர் மோடியை ஏற்கவில்லை என ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
Also Read: உலக நாடுகளை ஒன்றிணைக்கும் பிரதமர் மோடியின் “ஒரே உலகம், ஒரே சூரியன், ஒரே கட்டம்” என்ற மெகா திட்டம்..