ஆறு ஆண்டுகளுக்கு பிறகு முதன்முறையாக சந்திக்க உள்ள இந்திய மற்றும் பாகிஸ்தான் பிரதமர்கள்..?

உஸ்பெகிஸ்தானின் சமர்கண்டில் செப்டம்பர் 15 மற்றும் 16 ஆகிய நாட்களில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் பிரதமர் மோடி மற்றும் பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) பொதுச்செயலாளர் ஜாங் மிங் வெள்ளிக்கிழமை முதல் மூன்று நாட்களுக்கு பாகிஸ்தானுக்கு பயணம் மேற்கொள்கிறார். பயணத்தின் போது செப்டம்பர் 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் உஸ்பெகிஸ்தானில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டிற்கு பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப்பிற்கு அழைப்பு விடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரமர் நரேந்திர மோடி இந்த உச்சி மாநாட்டில் பங்கேற்கிறார். பாகிஸ்தான் பிரதமர் பங்கேற்கும் பட்சத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் பிரதமர்கள் நேருக்கு நேர் சந்திக்கும் வாய்ப்பை இந்த மாநாடு வழங்கும். ஆறு ஆண்டுகளுக்கு பிறகு இந்திய மற்றும் பாகிஸ்தான் பிரதமர்கள் ஒநே மாநாட்டில் பங்கேற்பதும், நேரடியாக ஒருவரையொருவர் பார்க்க உள்ளதும் இதுவே முதல்முறை ஆகும்.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் பிரதமர்கள் இடையே சந்திப்பு நடைபெறுவதற்கு வாய்ப்புகள் அதிகம் என கூறப்படுகிறது. ஏனெனில் அனைத்து நாட்டு பிரதமர்களும் இரண்டு நாட்களுக்கு ஒரே வளாகத்தில் இருப்பார்கள். இந்த ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில், சீனா, பாகிஸ்தான், இந்தியா, ரஷ்யா, தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், கிர்கிஸ்தான் மற்றும் கஜகஸ்தான் ஆகிய நாடுகள் உறுப்பினர்களாக உள்ளனர்.

இந்த மாநாட்டில், அமைப்பின் ஆற்றல் மற்றும் அதிகாரத்தை உயர்த்துவதற்கான முயற்சிகள், பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்துதல், வறுமையை குறைத்தல் மற்றும் உணவு பாதுகாப்பை உறுதிபடுத்துதல் ஆகியவை அடங்கும்.

மேலும் வர்த்தக தடைகளை நீக்குதல், தொழில்நுட்ப விதிமுறைகளை சீரமைத்தல் மற்றும் சுங்க நடைமுறைகளை டிஜிட்டல் மயமாக்குதல் போன்ற நடவடிக்கைகளை உள்ளடக்கிய உள்நாட்டு பிராந்திய வர்த்தகத்தின் வளர்ச்சிக்கான ஒரு திட்டத்தை உருவாக்குவது போன்றவை விவாதிக்கப்பட உள்ளன.

Leave a Reply

Your email address will not be published.