திங்களன்று மீண்டும் விசாரணை.. லாவண்யா பெற்றோரிடம் வாக்குமூலம் பதிவு செய்ய உயர்நீதிமன்ற கிளை உத்தரவு..
புதன்கிழமை தற்கொலை செய்து கொண்ட 17 வயது அரியலூர் மாணவி லாவண்யாவின் பெற்றோர் தொடர்ந்த வழக்கில், சிறுமியின் உடலை மீட்டு இறுதி சடங்கு நடத்த சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
சிறுமியின் பெற்றோர் பள்ளி காப்பாளர் சிறுமியை கொடுமை படுத்தியதாகவும், கிறிஸ்துவ மதத்திற்கு மாற்ற முயன்றதாகவும் கூறி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். அதில் இரண்டாவது பிரேத பரிசோதனைக்கு உத்தரவிடகோரியும், CBCID போலிசார் இந்த வழக்கை விசாரிக்க வேண்டும் என நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.
இரண்டாவது பரிசோதனையை நிராகரித்த நீதிமன்றம், மாணவியின் பெற்றோர் தஞ்சாவூர் மாஜிஸ்திரேட் முன்னிலையில் மகளின் தற்கொலைக்கான காரணம் பற்றி வாக்குமூலம் தர நீதிமன்றம் உத்தரவிட்டது. திங்களன்று மீண்டும் விசாரணை தொடங்கும் போது இந்த அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது.
விடுதியில் தங்கி பயின்று வரும் மாணவியை விடுதி காப்பாளர் கிறிஸ்துவ மதத்திற்கு மாற கட்டாய படுத்தியதாகவும், மாற மறுத்ததால் அறையை சுத்தம் செய்ய சொல்லி கட்டாய படுத்தியதால் மனம் உடைந்த மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக குற்றம் சாட்டி உள்ளனர்.
அவரது மரணத்திற்கு பிறகு வெளிவந்த வீடியோவில் சிறுமி கூறியதாவது, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு என் முன்னால் என் பெற்றோரிடம் என்னை கிறிஸ்துவ மதத்திற்கு மாற்ற முடியுமா என கேட்டார்கள். மாற முடியாது என கூறியதால் அதிலிருந்து விடுதி காப்பாளர் தன்னை துன்புறுத்தி வந்ததாக மாணவி கூறியுள்ளார்.
அந்த வீடியோவை எடுத்தவரை போலிசார் தேடிவரும் நிலையில், மாணவியிடம் வாக்குமூலம் பெற்றவரை துன்புறுத்த கூடாது என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது, விடுதி காப்பாளர் மாணவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கின் கிழ் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கு திங்கள் கிழமை மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது.