கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு துறையில் முதலீடு செய்ய இந்தியாவிற்கு ரஷ்யா அழைப்பு..?

ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே போர் தீவிரமடைந்து வரும் நிலையில், ரஷ்யாவில் இந்தியா தனது முதலீடுகளை ஆழப்படுத்துமாறு ரஷ்ய துணை பிரதமர் இந்தியாவை வலியுறுத்தியுள்ளார். மேலும் இந்தியாவில் தங்களது நிறுவனங்களின் விற்பனை நெட்வொர்க்கை விரிவுபடுத்துவதில் ஆர்வமாக உள்ளதாகவும் ரஷ்யா தெரிவித்துள்ளது.

கடந்த 1991 ஆம் ஆண்டு சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்கு பின்னர் ரஷ்யாவின் பொருளாதாரம் நெருக்கடியை சந்தித்து வருகிறது. இந்த நிலையில் தற்போது உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில் அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் மற்றும் ஜப்பான் போன்ற நாடுகள் ரஷ்யா மீது பொருளாதார தடை விதித்து வருகிறது.

ஐக்கிய நாடுகள் சபையில் ரஷ்யாவிற்கு எதிராக கொண்டுவந்த தீர்மானத்தில், இந்தியா வாக்களிக்காமல் நடுநலை வகித்தது. இதனால் சில மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவின் நடவடிக்கைகளை கண்டிக்குமாறு இந்தியாவை கேட்டுக்கொண்டன.

இந்தியாவுக்கான ரஷ்யாவின் எண்ணெய் மற்றும் பெட்ரோலிய பொருட்களின் ஏற்றுமதி 1 பில்லியன் டாலரை எட்டியுள்ளது. மேலும் இந்த எண்ணிக்கையை அதிகரிக்க தெளிவான வாய்ப்புகள் உள்ளதாக ரஷ்யாவின் துணை பிரதமர் அலெக்சாண்டர் நோவக் பகிர்ந்து கொண்ட அறிக்கையை இந்தியாவில் உள்ள ரஷ்ய தூதரகம் வெளியிட்டுள்ளது.

இந்தியாவின் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எதிவாயு அமைச்சர் ஹர்தீப் சிங் பூரியிடம் ரஷ்ய துணை பிரதமர் நோவக் கூறுகையில், ரஷ்ய எண்ணெய் மற்றும் எரிவாயு துறையில் இந்திய முதலீட்டை மேலும் ஈர்ப்பதில் நாங்கள் ஆர்வமாக உள்ளோம். மேலும் ரஷ்ய நிறுவனங்களின் விற்பனை நெட்வொர்க்குகளை இந்தியாவில் விரிவுபடுத்த ஆர்வமாக உள்ளதாக தொலைபேசியில் நோவக் கூறினார்.

ஐரோப்பிய நாடுகளுக்கு இரண்டாவது மிகப்பெரிய கச்சா எண்ணெய் ஏற்றுமதியாளராக இருக்கும் ரஷ்யாவின் எண்ணெய் இறக்குமதியை அமெரிக்கா தடை செய்த நிலையில் பிரிட்டன் இந்த வருடத்திற்குள் குறைக்க உள்ளதாக அறிவித்துள்ளது. இந்திய அரசு நடத்தும் நிறுவனங்கள் ரஷ்ய எண்ணெய் மற்றும் எரிவாயு பங்குகளை வைத்துள்ளன.

அதேநேரம் ரஷ்யாவின் ரோஸ்நேப்ட் உள்ளிட்ட நிறுவனங்கள் இந்திய சுத்திகரிப்பு நிறுவனமாக நயாரா எனர்ஜியில் பெரும்பான்மையான பங்குகளை வைத்துள்ளன. சில இந்திய நிறுவனங்களும் ரஷ்ய எண்ணையை வாங்குகின்றன. மேலும் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் புதிய அலகுகளை கட்டுவது உள்ளிட்ட சிவில் அணுசக்தியில் இருநாடுகளும் ஒத்துழைப்பை தொடர வேண்டும் எனவும் நோவக் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.