உக்ரைன் மீது முதன்முறையாக ஹைப்பர்சோனிக் ஏவுகணை தாக்குதல் நடத்திய ரஷ்யா..?

மேற்கு உக்ரைனில் உள்ள இவானோ-பிரான்கிவ்ஸ்க் நகரில் உள்ள பெரிய ஆயுத கிடங்கை அழிக்க ரஷ்யா முதன்முறையாக ஹைப்பர்சோனிக் ஏவுகணையை பயன்படுத்தியதாக தெரிவித்துள்ளது.

ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் இகோர் கொனாஷென்கோவ் கூறுகையில், வெள்ளிக்கிழமை ஹைப்பர்சோனிக் கின்சல் (Dgger) ஏவுகணையால் மேற்கு உக்ரைனின் இவானோ-பிரான்கிவ்ஸ்க் நகருக்கு அருகே ஏவுகணைகள் மற்றும் விமான வெடிமருந்துகள் இருந்த ஆயுத கிடங்கை தாக்கி அழித்ததாக கூறியுள்ளார்.

இதனை உக்ரைனின் விமானப்படையின் செய்தி தொடர்பாளர் இவானோ-பிரான்கிவ்ஸ்க் பகுதியில் உள்ள ஆயுத கிடங்கின் மீது நடந்த தாக்குதலை உறுதிபடுத்தியுள்ளார். ரஷ்யா தனது படைகளை பிப்ரவரி 24 அன்று உக்ரைனுக்குள் அனுப்பிய நிலையில் முதன்முறையாக ஹைப்பர்சோனிக் கின்சல் அமைப்பை பயன்படுத்தியுள்ளது.

மேலும் ரஷ்ய படைகள் சனிக்கிழமை அன்று உக்ரைனின் துறைமுக நகரான ஒடேசாவிற்கு அருகிலுள்ள இராணுவ வானொலி மற்றும் உளவு மையங்களையும் அழித்ததாக கொனாஷேன்கோவ் கூறியுள்ளார். மேலும் ரஷ்யாவின் இன்டர்பாக்ஸ் செய்தி நிறுவனம் ஹைப்பர்சோனிக் கின்சல் அமைப்பை ரஷ்யா பயன்படுத்தியது இதுவே முதல் முறை என கூறியுள்ளது.

உக்ரைனில் இருந்து பிரிந்த பகுதிகளான டொனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் ஆகியவற்றை சுதந்திர நாடாக ரஷ்யா அங்கீகரித்த மூன்று நாட்களுக்கு பிறகு, பிப்ரவரி 24 முதல் உக்ரைனில் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் ரஷ்யா மீது அமெரிக்கா உட்பட பல நாடுகள் பொருளாதார தடைகள் விதித்து வருகின்றன.

கின்சல் என அழைக்கப்படும் இந்த ஹைப்பர்சோனிக் ஏவுகணை மேக் 10 வேகத்தில் பயணிக்க கூடியது. இந்த நிலையில் முதன்முறையாக ரஷ்யா உக்ரைன் மீது ஹைப்பர்சோனிக் ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.