சூயஸ் கால்வாய்க்கு மாற்றாக ஈரான் வழியாக இந்தியாவிற்கு சரக்குகளை அனுப்பும் ரஷ்யா..?

மத்திய தரைக்கடல் மற்றும் சூயஸ் கால்வாய் வழியை தவிர்த்து அதற்கு மாற்றாக காஸ்பியன் கடல் மற்றும் ஈரான் வழியாக இந்தியாவுக்கு சரக்குகளை அனுப்ப ரஷ்யா மாற்று வழியை பயன்படுத்த துவங்கியுள்ளது.

சர்வதேச வடக்கு-தெற்கு போக்குவரத்து வழிதடத்தை (INSTC) பயன்படுத்தி ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் இருந்து இந்தியாவுக்கு ஈரான் வழியாக ரஷ்யா சோதனை அடிப்படையில் சரக்குகளை அனுப்பியுள்ளது. இந்த சரக்குகளை ஈரான் அரசுக்கு சொந்தமான கப்பல் நிறுவனம் சர்வதேச வடக்கு-தெற்கு போக்குவரத்து வழிதடம் வழியாக இந்தியாவிற்கு ரஷ்ய சரக்குகளை கொண்டு செல்லும்.

இந்தியாவிற்கு வரும் சரக்குகள் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் இருந்து வோல்கா நதியில் அமைந்துள்ள காஸ்பியன் துறைமுக நகரமான அஸ்ட்ராகானுக்கு சென்று கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அஸ்ட்ராகானில் சோலியாங்கா துறைமுகத்தில் சரக்குகள் மீண்டும் ஏற்றப்பட்டு காஸ்பியன் கடல் வழியாக ஈரானின் அஞ்சலி துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்படும்.

அங்கிருந்து தெற்கு ஈரானில் உள்ள துறைமுக நகரமான பந்தர் அப்பாஸுக்கு சாலை வழியாக கொண்டு செல்லப்படும். பின்னர் துறைமுகத்தில் சரக்குகள் மீண்டும் கப்பலில் ஏற்றப்பட்டு அங்கிருந்து நவி மும்பையில் உள்ள துறைமுகத்திற்கு சரக்குகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 41 டன் எடை கொண்ட இரண்டு 40 அடி உயர மர லேமினேட் கொல்கலன்கள் கப்பலில் சரக்குகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

பொதுவாக ரஷ்யாவில் இருந்து சரக்குகள் பால்டிக் கடல்-வட கடல்- மத்திய தரைக்கடல்-சூயஸ் கால்வாய்- செங்கடல்- அரேபிய கடல் பாதை வழியாக இந்தியாவிற்கு சரக்குகள் வந்தடைய கிட்டத்தட்ட 40 நாட்கள் ஆகும். ஆனால் தற்போது காஸ்பியன் கடல் மற்றும் ஈரான் வழியாக சரக்குகள் இந்தியா வந்தடைய கிட்டத்தட்ட 25 நாட்கள் மட்டுமே ஆகும் என கூறப்படுகிறது. மேலும் இதனால் ரஷ்யா மற்றும் இந்தியா இடையேயான போக்குவரத்து செலவு 30 சதவீதம் அளவிற்கு குறைகிறது.

Also Read: இந்தியா ஐரோப்பிய யூனியன் இடையே சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் விரைவில் கையெழுத்து..?

சர்வதேச வடக்கு-தெற்கு போக்குவரத்து வழித்தடம் என்பது இந்தியா, ரஷ்யா, ஈரான், ஐரோப்பா மற்றும் மத்திய ஆசியா இடையே சரக்குகளை நகர்த்துவதற்கான 7,200 கிமீ நீளமுள்ள கப்பல், இரயில் மற்றும் சாலை வழித்தடங்களை கொண்ட திட்டமாகும். சீனாவின் பெல்ட் அண்ட் ரோட் திட்டதிற்கு முன்பே இந்த திட்டம் தொடங்கப்பட்டது.

Also Read: இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய கச்சா எண்ணெய் சப்ளையராக உருமாறிய ரஷ்யா..?

இந்த INSTC திட்டம் ரஷ்யா, இந்தியா மற்றும் ஈரான் ஆகியவற்றால் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் செப்டம்பர் 2000 ஆண்டு தொடங்கப்பட்டு, 16 மே 2002 அன்று கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தில் 2005ல் அஜர்பைஜான் இணைந்தது. பின்னர் இந்தியா, ரஷ்யா, ஈரான், அஜர்பைஜான், பெலாரஸ், பல்கேரியா, ஆர்மீனியா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், ஓமன், தஜிகிஸ்தான், துருக்கி மற்றும் உக்ரைன் அங்கீகரித்தன. இதன் மூலம் சீனாவின் பெல்ட் அண்ட் ரோட் மற்றும் சூயஸ் கால்வாய் திட்டத்திற்கு மாற்றாக INSTC உருவெடுத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published.