இந்தியா வந்தடைந்தது S-400 ஏவுகணை அமைப்பு..? பஞ்சாபில் நிலைநிறுத்த திட்டம்..?
S-400 ஏவுகணை அமைப்பின் முதல் படைப்பிரிவு இந்தியா அனுப்பப்பட்டுள்ள நிலையில் அவை இந்தியா வந்தடைந்துள்ளது. இந்த ஆண்டின் இறுதிக்குள் முதல் படைப்பிரிவு விநியோகம் முடிவடையும் என கூறப்படுள்ளது. இவை கடல் மற்றும் வான் வழியாக இந்தியாவிற்கு கொண்டு வரப்படுகின்றன.
அடுத்த சில வாரங்களில் இந்த ஏவுகணை அமைப்பு செயல்பட தொடங்கும் என அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்த S-400 ஏவுகணை அமைப்பின் முதல் படைப்பிரிவு பஞ்சாப் செக்டாரில் நிலைநிறுத்தப்பட உள்ளது. எல்லை மாநிலத்தில் நிலை நிறுத்துவதன் மூலம் இந்தியாவின் வான் பாதுகாப்பு திறன்களுக்கு ஒரு பெரிய ஊக்கத்தை அளிக்கும்.
மேலும் பாகிஸ்தான் மற்றும் சீனாவால் ஏற்படும் அச்சுறுத்தல்களையும் சமாளிக்க இந்த ஏவுகணை அமைப்பு உதவும். இந்த S-400 ஏவுகணை அமைப்பை இயக்குவது தொடர்பாக இந்திய விமானப்படை வீரர்கள் ஏற்கனவே ரஷ்யா சென்று பயிற்சி பெற்றுள்ளனர். பஞ்சாபில் நிலைநிறுத்தப்பட்ட உடன் இந்திய விமானப்படை கிழக்கில் கவனம் செலுத்தும் என கூறப்பட்டுள்ளது.
கடந்த 2018 ஆம் ஆண்டு அக்டோபரில் இந்தியா ஐந்து S-400 வான் பாதுகாப்பு அமைப்பை வாங்குவது தொடர்பாக ரஷ்யாவுடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இவை 35,000 கோடி மதிப்பில் ஒப்பந்தமானது. அவற்றில் 2019 ஆம் ஆண்டு முதல் தவணையாக 800 மில்லியன் அமெரிக்க டாலரை இந்தியா செலுத்தியது.
இந்த S-400 வான் பாதுகாப்பு அமைப்பு இலக்கு அமைப்புகள், மல்டிஃபங்ஷன் ரேடார், தன்னாட்சி கண்டறிதல், விமான எதிர்ப்பு ஏவுகணை அமைப்புகள், லாஞ்சர்கள், கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம் ஆகிய அமைப்புகளை கொண்ட வான் பாதுகாப்பு சாதனம் ஆகும். ஒரே நேரத்தில் 36 இலக்குகளை ஈடுபடுத்த முடியும்.
Also Read: நீர்மூழ்கி கப்பலை தாக்கி அழிக்கும் SMART அமைப்பை வெற்றிகரமாக சோதனை செய்த DRDO..
ரேடார் விமானம், ரோட்டோகிராப்ட், குரூஸ் ஏவுகணைகள், வழிகாட்டும் ஏவுகணைகள், ட்ரோன்கள் மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணைகளை 600 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் போதே அதனை கண்டறிந்து கண்காணிக்க முடியும். F-16 மற்றும் F-22 போன்ற அதிநவீன போர்விமானங்களையும், டோமாஹாக் போன்ற ஏவுகணைகளையும் கண்டறிந்து அழிக்க முடியும்.
Also Read: S-500 ஏவுகணை அமைப்பை முதல் நாடாக வாங்குகிறது இந்தியா..? ரஷ்ய துணை பிரதமர் அறிவிப்பு..
ரஷ்யா இதனை 2007 முதல் சேவையில் பயன்படுத்தி வருகிறது. இந்த ஏவுகணை அமைப்பு மூலோபாய மற்றும் தந்திரோபாய விமானங்கள், கப்பல், பாலிஸ்டிக் மற்றும் குரூஸ் ஏவுகணைகளை அழிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் ஏவுகணை அமைப்பின் இலக்கு 400 கிலோமீட்டர் தூரம் மற்றும் 30 கிலோமீட்டர் உயரம் என கூறப்பட்டுள்ளது.
இருப்பினும் இந்தியா ரஷ்யாவிடம் இருந்து S-400 ஏவுகணை அமைப்பை வாங்குவதால் அமெரிக்காவின் CAATSA தடைகளை எதிர்கொள்ள வேண்டி உள்ளது. இதுதொடர்பாக இந்தியா அமெரிக்காவிடம் இராஜதந்திர முறையில் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இதனால் பெரும்பாலும் அமெரிக்கா இந்தியா மீது தடை விதிக்க வாய்ப்பு மிக மிக குறைவு என கூறப்படுகிறது. சீனாவும் 2018 ஆம் ஆண்டு முதல் S-400 ஏவுகணை அமைப்பை பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.