குடியுரிமை சட்டத்திற்கு எதிராக பேச்சு.. தேசதுரோக வழக்கு பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு..
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக உத்திரபிரதேசத்தில் உள்ள அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம் மற்றும் டெல்லியின் ஜாமியா பகுதியில் ஷர்ஜீல் இமாம் பேசிய சர்ச்சைக்குரிய பேச்சுக்கள் தொடர்பாக அவர் மீது தேசதுரோக வழக்கு பதிவு செய்ய டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் ஜேஎன்யு மாணவரும், ஷஹீன் பாக் போராட்டத்தின் முக்கிய அமைப்பாளர்களில் ஒருவருமான ஷர்ஜீல் இமாம், டிசம்பர் 13, 2019 அன்று ஜாமியா பகுதியிலும், ஜனவரி 16, 2020 அன்று அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்திலும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்.
இந்தநிலையில் ஜனவரி 28, 2020 அன்று இமாம் UAPA மற்றும் தேசவிரோத நடவடிக்கையின் கீழ் கைது செய்யப்பட்டார். இமாமுக்கு எதிரான குற்றப்பத்திரிக்கையில், தேசத்தின் இறையாண்மை மற்றும் ஒருமைபாட்டிற்கு எதிராக பேசுதல், சமூகத்தின் ஒரு குறிப்பிட்ட பிரிவினரை சட்ட விரோத செயல்களில் ஈடுபட தூண்டுதல் ஆகியவை குற்றம் சாட்டப்பட்டுள்ளன.
இமாம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தன்வீர் அகமது மிர் நீதிமன்றத்தில் சமர்பித்த அறிக்கையில், இமாம் பேசிய பேச்சுக்களில் வன்முறை தொடர்பான பேச்சுக்கள் இல்லை. அரசு தரப்பில் பொய் குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளது.
அரசாங்கத்தை விமர்சிப்பது தேசத்துரோகத்திற்கு காரணமாக இருக்க முடியாது என்றும் சந்தேகத்தின் பேரில் ஒரு நபர் மீது குற்றம் சாட்ட முடியாது என நீதிமன்றத்தில் தெரிவித்தார். இதனை எதிர்த்த அரசு தரப்பு வழக்கறிஞர், இமாமின் பேச்சினால் வன்முறை கலவரங்கள் நடந்ததாக வாதிட்டார்.
இதனை விசாரித்த டெல்லி கூடுதல் செஷன்ஸ் நீதிபதி அமிதாப் ராவத், இமாம் மீது இந்திய தண்டனை சட்டம் பிரிவுகள் 124 தேசதுரோகம், 153ஏ மதத்தின் அடிப்படையில் வெவ்வேறு குழுக்களிடையே பகைமையை ஊக்குவித்தல், 153பி தேசிய ஒருமைபாட்டுக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் பேசுதல் மற்றும் வலியுறுத்துதல், 505 பொதுமக்களை தவறாக வழிநடத்துதல் மற்றும் UAPA பிரிவு 13 சட்டவிரோத நடவடிக்கை ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்ய டெல்லி நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.