வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்ட பிரம்மோஸ் மற்றும் யுரான் கப்பல் எதிர்ப்பு ஏவுகணை..

அந்தமான் நிக்கோபார் தீவுகளில் பிரம்மோஸ் மற்றும் யுரான் ஆகிய 2 கப்பல் எதிர்ப்பு ஏவுகணையை இந்திய கடற்படை இன்று வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது. இரண்டு ஏவுகணைகளும் இலக்கை வெற்றிகரமாக தாக்கி அழித்ததாக இந்திய கடற்படை தெரிவித்துள்ளது.

இந்த ஏவுகணைகளை அந்தமான் நிக்கோபார் கட்டளை (ANC) சோதனை செய்தது. அந்தமான் நிக்கோபார் தீவுகளில் நிலத்தை அடிப்படையாக கொண்ட பிரம்மோஸ் சூப்பர்சோனிக் கப்பல் எதிர்ப்பு ஏவுகணை ஏவப்பட்ட நிலையில், யுரான் கப்பல் எதிர்ப்பு ஏவுகணை இந்திய கடற்படையின் கார்வெட்டிலிருந்து ஏவப்பட்டது.

நிலம் மற்றும் கப்பலில் இருந்து ஏவப்பட்ட இந்த ஏவுகணைகள் இலக்கை துல்லியமாக தாக்கி அழித்ததாக ANC தெரிவித்துள்ளது. கடந்த இரண்டு வாரங்களில் பிரம்மோஸ் ஏவுகணையின் இரண்டாவது சோதனையாகும். இதற்கு முன்பு ஜனவரி 20 அன்று ஒடிசா கடற்கரையில் உள்ள சந்திப்பூரில் இருந்து பிரம்மோஸ் ஏவுகணை சோதனை செய்யப்பட்டது.

சமீபத்தில் பிலிப்பைன்ஸ் பிரம்மோஸ் கப்பல் ஏவுகணைக்காக இந்தியாவின் பிரம்மோஸ் ஏரோஸ்பேஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துடன் 2,780 கோடி மதிப்பில் ஒப்பந்தம் மேற்கொண்டது. ஒப்பந்தம் கையெழுத்திட்ட சில நாட்களுக்கு பிறகு இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது.

இந்த பிரம்மோஸ் சூப்பர்சோனிக் குருஸ் ஏவுகணை 3 மேக் வேகத்தில் 290 கிலோமீட்டர் வரை சென்று தாக்க கூடியது. இதற்கிடையில் பிரம்மோஸ்-II ஹைப்பர்சோனிக் க்ருஸ் ஏவுகணையானது மேக் 7 வேகத்தில் 600 கிலோமீட்டர் வரை சென்று தாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இது இரண்டு நிலை உந்துவிசை அமைப்பை கொண்டுள்ளது. முதலாவது திட மற்றும் இரண்டாவது திரவ நிலையை கொண்டுள்ளது. இதில் உள்ள ராம்ஜெட் எஞ்சின் சூப்பர்சோனிக் வேகத்தை அளித்து எரிபொருள் பயன்பாட்டையும் குறைக்கிறது. கடலில் இருந்து ஏவப்படும் பிரம்மோஸ் ஏவுகணையானது நான்கு வகைகள் உள்ளன.

முதலாவது போர்கப்பலில் இருந்து ஏவப்படும் கப்பல் எதிர்ப்பு ஏவுகணை, இரண்டாவது போர்கப்பலில் இருந்து ஏவப்படும் தரைவழி தாக்குதல் ஏவுகணையாகும். இந்த இரண்டு வகைகளும் ஏற்கனவே இந்திய கடற்படையில் இணைக்கப்பட்டு செயல்பாட்டில் உள்ளன. மூன்றாவது நீர்மூழ்கி கப்பலில் இருந்து ஏவப்படும் கப்பல் எதிர்ப்பு ஏவுகணை, வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டுள்ளது. நான்காவது நீர்மூழ்கி கப்பலில் இருந்து ஏவப்படும் தரை தாக்குதல் ஏவுகணையாகும்.

Leave a Reply

Your email address will not be published.