தாலிபான்கள் மீது தற்கொலைப்படை தாக்குதல்..? காபூலில் பதற்றம்..
ஆப்கானிஸ்தானின் காபூலில் உள்ள பாஸ்போர்ட் அலுவலகத்தில் தற்கொலை தாக்குதல் நடத்தவிருந்த நபரை தாலிபான் சுட்டுக்கொன்றனர். இதனை காபூல் காவல்துறையின் செய்தி தொடர்பாளர் மொபின் கான் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆகஸ்டு மாதம் தாலிபான் ஆட்சியை பிடித்ததில் இருந்து தாலிபான் மீது பலமுறை தாக்குதல்கள் நிகழ்த்தப்பட்டு வருகின்றன. பெரும்பாலும் உள்ளூர் நபர்களால் இந்த தாக்குதல் நடத்தப்படுவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் வியாழன் அன்று காபூலில் உள்ள பாஸ்போர்ட் அலுவலகம் மீண்டும் திறக்கப்பட்டது.
பாஸ்போர்ட் விண்ணப்பிப்பதற்கு அலுவலகம் வியாழன் அன்று திறக்கப்படும் என தாலிபான்கள் அறிவித்ததை அடுத்து அதிகாலை முதலே காபூல் பாஸ்போர்ட் அலுவலகம் முன்பு பொதுமக்கள் குவிய தொடங்கினர். பாதுகாப்பில் 200 தாலிபான்கள் இருந்ததாக கூறப்படுகிறது.
கூட்டம் கூடியதால் பலர் தாலிபான்களால் தடுத்து நிறுத்தப்பட்டனர். சிலர் வீட்டிற்கு அனுப்பப்பட்டனர். உள்ளே நுழைய அழுத்தம் கொடுத்த சிலரின் ஆவணங்களை தாலிபான்கள் கிழித்து எறிந்தனர். பின்னர் அதிக நெரிசல் காரணமாக பாஸ்போர்ட் வழங்குவது ரத்து செய்யப்பட்டது.
இந்த நிலையில் பாஸ்போர்ட் அலுவலகத்தில் நுழைய முயன்ற சந்தேகத்திற்குரிய நபரை தாலிபான்கள் சுட்டுக்கொன்றனர். அந்த நபர் தாலிபான்கள் மீது தற்கொலை தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருந்ததாக ஆப்கானிஸ்தானின் உள்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார். நாட்டில் உயிர் வாழ சாத்தியமில்லாததால் மக்கள் நாட்டைவிட்டு வெளியேற பாஸ்போர்ட் அலுவலகத்தை நோக்கி படையெடுத்த வண்ணம் உள்ளனர்.
Also Read: பணத்திற்காகவே பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் பங்கேற்றோம். பொது நலனுக்காக அல்ல: இம்ரான்கான்