நம்பி நாராயணன் வழக்கில் CBI விசாரணைக்கு உத்தரவிட்டது உச்சநீதிமன்றம்..

முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணின் உளவு வழக்கு குறித்து CBI விசாரணை நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நம்பி நாராயணனை வேண்டும் என்றே சிக்க வைத்த போலிஸ் அதிகாரிகளிடம் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

கடந்த 1994 ஆம் ஆண்டு கிரையோஜெனிக் இஞ்சின் தொடர்பான ரகசியங்களை மாலத்தீவு பெண்ணிடம் அளித்ததாக நம்பி நாராயணன் கைது செய்யப்பட்டார். ஆனால் இது திட்டமிட்ட சதி என விசாரணையில் தெரிய வந்தது. பின்னர் நம்பி நாராயணன் 1998 ஆம் ஆண்டு விடுவிக்கப்பட்டு அவருக்கு நஷ்ட ஈடும் வழங்கப்பட்டது.

CBI விசாரணைக்கு உத்தரவிட்டதை நம்பி நாராயணன் வரவேற்றுள்ளார். நாட்டின் கிரையோஜெனிக் திட்டத்தை தாமதப்படுத்தவே என்னை கைது செய்தனர் என்றும், இதற்கு எதிராக தான் விசாரணை கோரியதாகவும் நாராயணன் தெரிவித்துள்ளார்.

நம்பி நாராயணன் வழக்கில் போலிஸ் அதிகாரிகளின் பங்கு தொடர்பாக உயர்மட்ட குழு தாக்கல் செய்த அறிக்கையை பரிசீலிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு மனு ஒன்றை தாக்கல் செய்தது.

ஏப்ரல் 5 ஆம் தேதி இது ஒரு தேசிய பிரச்சனை என கருத்தில் கொண்டு விசாரணை நடத்த வேண்டும் என மத்திய அரசு கேட்டுக்கொண்டதை அடுத்து, அதனை உச்சநீதிமன்றம் ஏற்று கொண்டது.

இந்த வழக்கை 2018 ஆம் ஆண்டு விசாரித்த உச்சநீதிமன்றம் நம்பி நாராயணனுக்கு மிகப்பெரிய துன்பத்தையும், வேதனையையும் அளித்துள்ளதாக கூறியது. மேலும் 50 லட்சம் நஷ்ட ஈடு வழங்கவும் கேரள அரசுக்கு உத்தரவிட்டது.

நாராயணன் சட்ட விரோதமாக கைது செய்யப்பட்டதற்கு அப்போதைய கேரள உயர் போலிஸ் அதிகாரிகளே காரணம் என CBI தெரிவித்திருந்தது. இதனையடுத்து நீதிபதி கான்வில்கர் தலைமையிலான அமர்வு, நம்பி நாராயணனை சிக்க வைத்த போலிஸ் அதிகாரிகளை விசாரணை நடத்த இப்போது CBIக்கு உத்தரவிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *