லாக்ஹீட் மார்ட்டின் நிறுவனத்துடன் இணைந்து S-76 ஹெலிகாப்டரை தயாரிக்க உள்ள டாடா நிறுவனம்..!

உலகின் மிகப்பெரிய பாதுகாப்பு உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான லாக்ஹீட் மார்ட்டின் மற்றும் டாடா இணைந்து சிகோர்ஸ்கி S-76 ஹெலிகாப்டரை இந்தியாவில் தயாரிப்பதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஏற்கனவே டாடா-ஏர்பஸ் நிறுவனம் இணைந்து இந்திய விமானப்படைக்கு 40 C-295 இராணுவ போக்குவரத்து விமானங்களை தயாரிக்க உள்ளன. தற்போது டாடா நிறுவனம் F-16 போர் விமானத்திற்கான இறக்கைகளையும், C-130 போக்குவரத்து விமானத்திற்கான பாகங்களையும் தயாரித்து வருகிறது.

டாடா மற்றும் லாக்ஹீட் மார்ட்டின் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்க உள்ள சிகோர்ஸ்கி S-76 ஹெலிகாப்டரை இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் விற்பனை செய்ய உள்ளதாக அந்நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. இது மத்திய அரசின் மேக் இன் இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியாகும்.

எத்தனை ஹெலிகாப்டர்கள் தயாரிக்கப்பட உள்ளன மற்றும் திட்டத்தின் செலவு உட்பட எந்த தகவலும் வெளியாகவில்லை. ஆனால் உள்நாட்டு சிறிய உற்பத்தியாளர்களுக்கு உதவும் வகையில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பாகங்களையே ஹெலிகாப்டரில் பயன்படுத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இது பல பில்லியன் டாலர் மதிப்பிலான ஒப்பந்தமாக இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

S-76 என்பது ஒரு நடுத்தர அளவிலான ஹெலிகாப்டர். இது உலகம் முழுவதும் பொதுமக்கள் மற்றும் இராணுவ துறைகளில் பரவலாக பயன்படுத்தப்படுகிறது. இந்த ஹெலிகாப்டரை பிரிட்டன், ஜப்பான், ஸ்பெயின், சவூதி அரேபியா, தாய்லாந்து மற்றும் அர்ஜென்டினா ஆகிய நாடுகள் தங்கள் இராணுவத்தில் பயன்படுத்தி வருகின்றன.

Leave a Reply

Your email address will not be published.