இளைஞர்களுக்கு ஆயுத பயிற்சி.. PFI அமைப்பை சேர்ந்த 3 பேரை கைது செய்த தெலுங்கானா போலிசார்..
தேச விரோத செயல்களில் ஈடுபட இளைஞர்களுக்கு ஆயுத பயிற்சி அளித்ததாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தயா (PFI) அமைப்பை சேர்ந்த 3 உறுப்பினர்களை தெலுங்கானாவின் நிஜாமாபாத் போலிசார் இன்று கைது செய்துள்ளனர்.
நிஜாமாபாத் காவல்துறை ஆணையர் கே.ஆர்.நாகராஜ் கூறுகையில், 3 PFI உறுப்பினர்கள் நிஜாமாபாத் நகரத்தில் உள்ள குண்டாரம் பகுதியில் உள்ள ஷதுல்லா ஒருவரின் வீட்டில் இருந்து கைது செய்யப்பட்டனர். இவர்கள் மெக்கானிக்குகள் போல் தங்களை காட்டி கொண்டு நிஜாமாபாத்தில் வசித்து வருகிறார்கள்.
இவர்களின் நோக்கம் அப்பாவி முஸ்லிம் இளைஞர்களை கண்டறிந்து அவர்களை ஷரியா சட்டத்தின் மூலம் பயங்கரவாதியாக மாற்றி பின்னர் நாடு முழுவதும் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளை உருவாக்குவது, பிற மதத்தினர் மீது தாக்குதல் நடத்துவது மற்றும் அவர்களை தேச விரோத செயல்களில் ஈடுபடுத்துவதாகும் என ஆணையர் தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் ஷேக் அப்துல்லா (40), முகமது இம்ரான்(22) மற்றும் அப்துல் மொபின்(27) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். மாநிலத்தில் ஆட்களை சேர்க்கும் இவர்கள் சேர்ந்த பின் அவர்களுக்கு கொடிய ஆயுதங்கள் மற்றும் தற்காப்பு கலைகளை எவ்வாறு பயன்படுத்துவது தொடர்பாக கற்று கொடுக்கின்றனர்.
நிஜாமாபாத், ஜகிடியல், ஐதராபாத், நெல்லுர், கர்னூல் மற்றும் கடப்பா ஆகிய பகுதிகளில் இது போன்ற பயிற்சி மையங்களை நடத்தி வருவதாக கைது செய்யப்பட்ட நபர் தெரிவித்துள்ளார். போலிசார் 2 நாட்களுக்கு முன்பு ஆட்டோநகர் பகுதியை சேர்ந்த 54 வயதான கராத்தே பயிற்றுவிப்பாளர் அப்துல் காதர் என்பரை போலிசார் கைது செய்தனர்.
அவரிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில் இன்று PFI அமைப்பை சேர்ந்த 3 உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட 3 பேரும் அப்துல் காதரை அனுகி அவரது வீட்டை கட்டுவதற்காக 6 லட்சம் பணம் தருவதாக கூறியுள்ளனர். அதற்கு பதிலாக அமைப்பில் சேரும் இளைஞர்களுக்கு கராத்தே, குங்ஃபூ மற்றும் ஆயுதங்களை எப்படி பயன்படுத்து போன்ற பயிற்சிகளை காதர் கற்று கொடுத்துள்ளார்.
இந்த பயிற்சிகள் அனைத்து காதர் வீட்டின் மேலே நடைபெற்றுள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளில் 200 க்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு பயிற்சி அளித்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. கைதுக்கு முன்பு ரகசிய தகவலின் அடிப்படையில் போலிசார் அப்துல் காதரின் வீட்டில் சோதனை மேற்கொண்டனர்.
வீட்டில் இருந்து PFI பதாகைகள், கராத்தே குச்சிகள், மத விரோதத்தை தூண்டும் புத்தகங்கள், ஆடியோ சிஸ்டம் மற்றும் பேருந்து மற்றும் ரயில் டிக்கெட்டுகளை போலிசார் பறிமுதல் செய்துள்ளனர். முகாமில் பயிற்சி பெற்ற 200 முஸ்லிம் இளைஞர்கள் மீதும் போலிசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அவர்களை தேடும் பணி தொடங்கியுளளதாக போலிசார் தெரிவிதுள்ளனர்.
கைது செய்யப்பட்ட 4 பேர் மீதும், இந்திய தண்டனை சட்டம் பிரிவு 120 ஏ (இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நபர்களின் கிரிமினல் சதி), 120 பி (கடுமையான குற்றத்திற்கான கிரிமினல் சதி), 153 ஏ (இரு வெவ்வேறு குழுக்கள் இடையே பகைமையை வளர்த்தல்) மற்றும் 141 (சட்டவிரோதமாக ஒன்றுகூடுதல்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது. மேலும் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டம் (UAPA) 1967 பிரிவு 13 (1) (பி) யும் வழக்கு பதியப்பட்டுள்ளது.