பாகிஸ்தான் இராணுவ வீரர்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்.. 5 பாகிஸ்தான் வீரர்கள் பலி..?
பாகிஸ்தானில் ஆப்கானிஸ்தான் எல்லைக்கு அருகே உள்ள வசிரிஸ்தான் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் ஐந்து பாகிஸ்தான் இராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இது பாகிஸ்தானுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பாகிஸ்தானின் ISPR வெளியிட்ட அறிக்கையில், பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் நான்கு இராணுவ வீரர்களும் ஒரு இன்ஸ்பெக்டரும் உயிரிழந்தனர். தாக்குதல் நடத்தியவர்களை பாகிஸ்தான் இராணுவம் மற்றும் போலிசார் அந்த பகுதியை சுற்றி வளைத்து தேடி வருகின்றனர்.
இதேபோல் கடந்த செப்டம்பர் மாதம் பாகிஸ்தானின் கைபர் பக்துன்வாவில் பயங்கரவாதிகள் இருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து தேடுதல் வேட்டையில் இறங்கியபோது பாகிஸ்தான் இராணுவ கேப்டன் சிக்கந்தர் பயங்கரவாதிகளால் கொலை செய்யப்பட்டார்.
ஆப்கானிஸ்தான் எல்லை மற்றும் பலுசிஸ்தான் போன்ற பகுதிகளிலும் பாகிஸ்தான் இராணுவ வீரர்கள் மீது அடிக்கடி தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. பயங்கரவாதத்திற்கு ஆதரவு அளிக்கும் பாகிஸ்தான் தற்போது அதே பயங்கரவாதத்தால் வேட்டையாடப்பட்டு வருகிறது.
ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியதை அடுத்து யார் ஆட்சியில் அமர்வது என அவர்களுக்கிடையே தாக்குதல் நடந்து வருகிறது. தாலிபன்களை பாகிஸ்தான் ஆதரிப்பதால் தாலிபான்களுக்கு எதிராக உள்ள குழுக்கள் பாகிஸ்தான் இராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்தி இருக்கலாம் என கூறப்படுகிறது.