டிக்டாக் நிறுவனத்தின் வங்கி கணக்கை முடக்கியது மத்திய அரசு..

டிக்டாக் நிறுவனம் வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக டிக்டாக்கின் தாய் நிறுவனமான பைட்டான்ஸ் நிறுவனத்தின் இந்தியாவில் உள்ள வங்கி கணக்கை மத்திய அரசு முடக்கியுள்ளது.

கடந்த ஆண்டு எல்லையில் இந்தியா சீனா இடையே மோதல் போக்கு இருந்து வந்தது. இந்த நிலையில் இருநாட்டு வீரர்களுக்கும் இடையில் நடந்த சண்டையில் இந்திய தரப்பில் 20 வீரரும் சீன தரப்பில் 45 வீரரும் இறந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால் சீனா அதனை உறுதி செய்யவில்லை. தனது தரப்பில் 5 பேர் மட்டுமே இறந்ததாக கூறியது. இந்த நிலையில் பாதுகாப்பு காரணங்களுக்காக மத்திய அரசு டிக்டாக் உட்பட 250 க்கும் மேற்பட்ட சீன செயலிகளுக்கு தடை விதித்து உத்தரவிட்டது.

டிக்டாக்கிற்கு நிரந்தர தடை விதித்ததால் இந்தியாவில் இருந்து வெளியேறுவதாக பைடான்ஸ் தெரிவித்திருந்தது. மேலும் ஆட்குறைப்பு நடவடிக்கைகளிலும் ஈடுபட்டது. இந்த நிலையில் பைடான்ஸ் நிறுவனமும் வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக இந்தியாவில் உள்ள அதன் HSBC மற்றும் சிட்டி பேங்க் வங்கி கணக்குகளை முடக்க வருமான வரித்துறை உத்தரவிட்டுள்ளது.

பைடான்ஸ் நிறுவனத்தின் சார்பில் மும்பை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த தடை தனது நிறுவனத்தின் நடவடிக்கைகளை பாதிக்கும் எனவும், எனவே இந்த தடையை நீக்க வேண்டும் என கூறியுள்ளது. மேலும் தங்களது வங்கி கணக்கில் 10 மில்லியன் டாலர் இருப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இரண்டு வங்கி கணக்குகளும் மட்டுமல்லாமல் நிறுவனத்துடன் தொடர்புடைய மற்ற வங்கி கணக்குகளையும் முடக்க மத்திய அரசு வங்கிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. கடந்த ஆண்டு பைடான்ஸ் இந்தியா நிறுவனத்தில் மேற்கொண்ட ஆய்வில் வரி ஏய்ப்பு செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *