கோவாவில் அமல் படுத்தப்பட்டுள்ள பொது சிவில் சட்டம் இந்தியாவுக்கே முன்னுதாரணமாக உள்ளது: S.A.பாப்டே

கோவாவில் அமல்படுத்தப்பட்டுள்ள பொது சிவில் சட்டம் இந்தியாவுக்கே முன் உதாரணமாக இருப்பதாக தலைமை நீதிபதி பாப்டே பாராட்டு தெரிவித்துள்ளார்.

கோவாவில் மும்பை உயர்நீதிமன்ற கிளையின் புதிய கட்டிட திறப்பு விழாவில் கலந்து கொண்டு பேசிய பாப்டே, இந்தியாவில் உச்சநீதிமன்றம் அளவுக்கு பலவிதமான அனுபவம் மற்றும் சவால்களை தரும் அளவுக்கு ஒரு நீதிமன்றம் உண்டு என்றால் அது கோவாவில் உள்ள அரசியலமைப்பு நீதிமன்றம் மட்டுமே என பாப்டே கூறியுள்ளார்.

இந்த பொது சிவில் சட்டத்தின் கீழ் நீதி வழங்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. கல்வியாளர்கள் கோவாவிற்கு சென்று உண்மையான பொது சிவில் சட்டம் பற்றிய மாற்றத்தை தெரிந்து கொள்ள வேண்டும் என பாப்டே கேட்டு கொண்டுள்ளார்.

இந்த பொதுசிவில் சட்டம், மத வேறுபாடு இல்லாமல் அனைத்து கோவா மக்களுக்கும் பொருந்துகிறது. இந்த சட்டத்தின் கீழ் பல்வேறு அனுபவங்களை நீங்கள் பெறலாம். வருமான வரி, விற்பனை வரி, பொதுநல வழக்கு, கொலை வழக்கு உட்பட பல்வேறு வழக்குகள் நடைபெற்று வருகின்றன என பாப்டே தெரிவித்தார்.

அனைத்து மதத்தினருக்கும் பொது சிவில் சட்டத்தை கொண்டு வர வேண்டும் என பாஜக உட்பட பல்வேறு அமைப்புகள் கோரிக்கைகள் வைத்து வருகின்றன. இந்தியாவில் விடுதலை அடைந்ததில் இருந்து இந்து, புத்த, சீக்கிய, ஜைன மதத்திற்கு ஒரு சிவில் சட்டமும், கிறிஸ்துவர்களுக்கு ஒரு சட்டமும், முஸ்லிம்களுக்கு ஒரு சட்டமும், யூதர்களுக்கு ஒரு சட்டமும் இருந்து வருகிறது.

ஆனால் போர்ச்சுகீசியர்களின் கட்டுப்பாட்டில் இருந்த கோவாவில் சுதந்திரத்திற்கு முன்பே பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்பட்டது. போர்ச்சுகீசியர்களிடம் இருந்து விடுதலை பெற்ற பின்பும் பொது சிவில் சட்டம் கோவாவில் தொடர்ந்து அமலில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *