AMCA ஐந்தாம் தலைமுறை போர் விமான இன்ஜின் தயாரிப்பில் இந்தியாவுடன் இணைய உள்ள அமெரிக்கா..?

இந்தியாவின் எதிர்கால அட்வான்ஸ்டு மீடியம் காம்பாட் ஏர்கிராப்ட்க்கு (AMCA) சக்தி அளிக்க பயன்படும் ஜெட் என்ஜின் தொழிற்நுட்பத்தை மேம்படுத்துவதில் இந்தியாவுடன் ஒத்துழைக்க அமெரிக்கா முன்வந்துள்ளது.

உலகின் முன்னணி ஜெட் என்ஜின் உற்பத்தியாளர்களில் ஒன்றான அமெரிக்காவின் ஜெனரல் எலக்ட்ரிக் (GE) இந்திய நிறுவனங்களுடன் இணைந்து 110 kn த்ரஸ்ட் இன்ஜினை உருவாக்குவதற்கான முன்மொழிவை சமர்பித்துள்ளது. AMCA இன்ஜினில் ஒத்துழைக்க பிரான்சின் சஃப்ரான் மற்றும் இங்கிலாந்தின் ரோல்ஸ் ராய்ஸ் ஆகிய நிறுவனங்களுடன் அமெரிக்காவின் ஜெனரல் எலக்ட்ரிக் நிறுவனமும் பரிசீலிக்கப்படுவதாக இராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதில் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு முன்னணி நிறுவனமாகும். மேலும் ஒரு தனியார் இந்திய நிறுவனமும் இந்த திட்டத்தில் ஈடுபட வாய்ப்புள்ளது. இதற்கு முன்பு இந்திய-அமெரிக்க பாதுகாப்பு வர்த்தகம் மற்றும் தொழிற்நுட்ப முன்முயற்சியின் (DTTI) கீழ் ஜெட் இன்ஜின் தொழிற்நுட்பத்தில் ஒத்துழைப்பதற்கான முந்தைய முன்மொழிவான கோர் அல்லது ஹாட் இன்ஜின் தொழிற்நுட்பத்தை பகிர்ந்து கொள்ள அமெரிக்கா தயக்கம் காட்டியதால் அக்டோபர் 2019 ல் இடைநிறுத்தப்பட்டது.

பின்னர் DTTI கட்டமைப்பின் கீழ் ஜெட் இன்ஜின் தொழில்நுட்பம் தொடர்பான கூட்டு பணிக்குழு கலைக்கப்பட்டது. இந்தியா-அமெரிக்கா DTTI யின் தலைவராக இருந்த அப்போதைய அமெரிக்க பாதுகாப்பு துணை செயலாளரான எல்லன் லார்ட், இன்ஜின்கள் மீதான ஒத்துழைப்பை இடைநிறுத்துவதாக டெல்லியில் அறிவித்தார்.

இந்த நிலையில் இன்ஜின் இணை வளர்ச்சி திட்டத்திற்கான சஃப்ரான் மற்றும் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனங்கள் ஆர்வத்தை வெளிப்படுத்தி உள்ளன. LCA தேஜஸ் GE-F404 இன்ஜின் மூலம் இயக்கப்படுகிறது. இது 85 kn உந்துதல் கொண்டது. இந்தியாவின் ஏரோநாட்டிக்கல் டெவலப்மென்ட் ஏஜென்சியின் LCA தேஜஸ் MK2, AMCA ஜந்தாம் தலைமுறை போர் விமானம் மற்றும் ட்வின் இன்ஜின் டெக்-அடிப்படையிலான போர் விமானம் (TEDBF) ஆகியவையும் 98 kn உந்துதல் GE-F414 இன்ஜினை பயன்படுத்தப்பட உள்ளன.

AMCA திட்டம் Mk2 நிலைக்கு வளர்ச்சி அடையும் போது மட்டுமே ஏரோநாட்டிக்கல் டெவலப்மென்ட் ஏஜென்சி ஆனது GE-F414 ல் இருந்து 110 kn உந்துதல் கொண்ட உள்நாட்டு இயந்திரத்திற்கு மாறுவதை நோக்கமாக கொண்டுள்ளது. அந்த இன்ஜின் வளர்ச்சிக்காகவே இந்தியா வெளிநாட்டு ஒத்துழைப்பை நாடுகிறது. AMCA Mk2 தயாரிப்பு 2035ல் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published.