உலகிலேயே முதலாவது சர்வதேச புத்தமத மாநாடு.. இந்தியாவின் பீகாரில் நடைபெற உள்ளது..
பீகாரில் நவம்பர் மாதம் முதல் சர்வதேச புத்தமத மாநாடு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை இந்திய கலாச்சார அமைப்பு மேற்கொண்டு வருகிறது. இந்த நிகழ்ச்சி நவம்பர் 19 மற்றும் 20 ஆம் தேதிகளில் நடக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புத்தமதம் தொடர்பான ஆய்வுகளுக்காக விருது வழங்கி கவுரவிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இலக்கியத்தில் புத்த மதம் என்ற தலைப்பில் முதல் சர்வதேச புத்தமத மாநாடு பீகாரின் நாளந்தாவில் நடைபெற உள்ளது.
பல கலாச்சார நிறுவனங்களின் ஆதரவின் மூலம் இந்திய கலாச்சார அமைப்பு இந்த புத்தமத மாநாட்டை நடத்துகிறது. புத்த மதத்தின் கல்வி, கலாச்சாரத்தின் மையமாக இந்தியாவை மாற்றுவதே நோக்கம் என இந்திய கலாச்சார மையத்தின் டைரக்டர் தினேஷ் பட்னை தெரிவித்தார்.
புத்த மதத்தை உருவாக்கிய புத்தர் கிமு 480 ஆம் ஆண்டு நேபாளத்தின் லும்பினியில் பிறந்தவர் ஆவார். கிமு 480 முதல் கிமு 500 ஆகிய இடைபட்ட காலத்தில் உத்திரபிரதேசத்தின் குசிநகரில் இறந்ததாக சொல்லப்படுகிறது. வாழ்வின் ரகசியத்தை காண்பதை நோக்கமாக கொண்டு வாரணாசி நோக்கி புறப்பட்டார்.
அப்போது அங்கு தியானத்தில் இருப்பதை பார்த்து சிலர் சீடராக புத்தருடன் இணைந்தனர். அப்போது இருந்து தான் புத்த மதம் உருவானதாக கூறப்படுகிறது. இதனை பிரபலப்படுத்தும் நோக்கில் தான் இந்திய முதல் சர்வதேச புத்த மத மாநாட்டை நடத்துகிறது.
அதேநேரம் இந்தியாவின் தர்மசாலா, தெலுங்கானா, புத்தர் இறந்த இடமாக கருதப்படும் சாரநாத், கேங்டாக் ஆகிய இடங்களில் பிராந்திய மாநாடு நடத்தப்படும் என கலாச்சார அமைப்பு தெரிவித்துள்ளது. புத்தமத ஆய்வுக்காக வழங்கப்படும் பதக்கம் தங்க முலாம் பூசப்பட்டு இருக்கும். அந்த பதக்கத்தை பெறுவோருக்கு 20,000 டாலர் பரிசு தொகையாக வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
மேலும் ஜப்பான், தாய்லாந்து, கம்போடியா, தென்கொரியா போன்ற நாடுகளிலும் மாநாடு நடத்தப்படும் என கூறப்பட்டுள்ளது. இந்தியாவில் நடைபெறும் இந்த மாநாட்டில் பல புத்ததுறவிகள் கலந்து கொள்வார்கள் என கூறப்படுகிறது. ஆனால் திபெத்தின் புத்த மத தலைவர் தலாய்லாமா கலந்து கொள்வாரா என தெரியவில்லை.
புத்த மதம் மூன்று பிரிவுகளை கொண்டது. தேரவாத பௌத்தம் என்ற பிரிவு இலங்கை, கம்போடியா, லாவோஸ், தாய்லாந்து, மியான்மர் போன்ற நாடுகளில் பின்பற்றப்படுகிறது. மகாயான பௌத்தம் சீனா, ஜப்பான், கொரியா, தைவான், சிங்கப்பூர் போன்ற நாடுகளில் பின்பற்றப்படுகிறது. மூன்றாவதாக வச்சிரயான பௌத்தம் திபெத், மங்கோலியா, நேபாளம், பூடான் மற்றும் இந்தியா போன்ற நாடுகளில் பின்பற்றப்படுகிறது.