இந்தியா, UAE இடையே ரூபாய் மற்றும் திர்ஹாமில் வர்த்தகம்..? இருநாட்டு வங்கிகள் பேச்சுவார்த்தை..!
இந்தியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இடையே ரூபாய் மற்றும் திர்ஹாமில் வர்த்தகம் மேற்கொள்வது தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ்க்கான இந்திய தூதர் சஞ்சய் சுதிர் தெரிவித்துள்ளார்.
சஞ்சய் சுதிர் கூறுகையில், இந்தியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு இடையே ரூபாய் மற்றும் திர்ஹாவில் வர்த்தகம் மேற்கொள்வது தொடர்பாக செப்டம்பர் 1 ஆம் தேதி பேச்சுவார்த்தை தொடங்கியது. இரு நாடுகளின் மத்திய வங்கிகளும் விவரங்கள் குறித்து விவாதித்து வருகின்றன.
இதன் நோக்கம் பரிவர்த்தனைகளில் செலவை குறைப்பதே ஆகும். ஜூன் முதல் அக்டோபர் வரையிலான இந்தியாவின் உலகளாவிய எண்ணெய் அல்லாத ஏற்றுமதி இரண்டு சதவீதம் குறைந்து 142 பில்லியன் டாலராக உள்ள நிலையில், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உடனான எண்ணெய் அல்லாத ஏற்றுமதி 8 சதவீதம் அதிகரித்து 9.69 பில்லியன் டாலராக உள்ளதாக சுதிர் தெரிவித்துள்ளார்.
மேலும் கூறுகையில், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இந்தியாவின் மூன்றாவது பெரிய வர்த்தக பங்காளியாகவும், இரண்டாவது பெரிய ஏற்றுமதி சந்தையாகவும் உள்ளது. இந்தியாவும் எமிரேட்ஸூம் இந்த ஆண்டின் தொடக்கத்தில் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இது மே மாதத்தில் செயல்பாட்டுக்கு வந்தது.
இதன் முக்கிய நோக்கம் பரிவர்த்தனைக்கான செலவை குறைப்பது. மூன்றாவது நாட்டின் நாணயத்தை பயன்படுத்தி வர்த்தகம் செய்யக்கூடாது என்பது எங்களின் யோசனை என சுதிர் தெரிவித்துள்ளார். உதாரணமாக UAE உடனான வர்த்தகத்தின் போது ரூபாய் முதலில் டாலராக மாற்றப்படுகிறது. பின்னர் டாலர் மீண்டும் திர்ஹாமாக மாற்றப்படுகிறது.
இதன் மூலம் குறிப்பிட்ட தொகையை அமெரிக்காவிற்கு வழங்க வேண்டும் என்பதால், இதனை தவிர்க்க இருநாட்டு மத்திய வங்கிகள் ரூபாய்-திர்ஹாமில் பரிவர்த்தனைகள் மேற்கொள்ள ஆலோசனை நடத்தி வருகின்றன. ஏற்கனவே இந்தியா பல நாடுகளுடன் ரூபாயில் வர்த்தகத்தை மேற்கொள்ள பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. ரூபாய்-ரூபிளில் வர்த்தகத்தை மேற்கொள்ள ரஷ்ய வங்கிகள் இந்தியாவில் 9 வோஸ்ரோ கணக்குகளை திறந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.