வெடிகுண்டு தாக்குதலில் TTP அமைப்பின் தளபதி பலி.. பாக். இராணுவத்தின் மீதான தாக்குதலை அதிகரிக்க போவதாக TTP அறிவிப்பு..

தெக்ரீக்-இ-தாலிபான் பாகிஸ்தான் (TTP) பயங்கரவாத அமைப்பின் தளபதி ஓமர் காலித் கொராசானி உட்பட பல மூத்த TTP கமாண்டர்களை ஏற்றி சென்ற வாகனத்தில் குண்டு வெடித்ததில் அந்த அமைப்பின் பல கமாண்டர்கள் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள மதரஸாக்களில் படித்த முன்னாள் பத்திரிக்கையாளரும் TTP அமைப்பின் தளபதியுமான ஓமர் காலித் கொராசானி, அப்துல் வாலி முகமது, ஹபீஸ் டோலத் கான் மற்றும் முல்லா ஹாசன் உட்பட பல TTP தலைவர்களுடன் வாகனம் கிழக்கு ஆப்கானிஸ்தானின் பாக்டிகா மாகாணத்தின் பெர்மால் மாவட்டத்தில் பயணம் செய்த போது வாகனத்தில் குண்டு வெடித்தது.

இந்த சம்பவம் நேற்று கிழக்கு ஆப்கானிஸ்தானில் நடந்துள்ளது. கொல்லப்பட்டவர்களின் ஒருவரான அப்துல் வாலி முகமது தலைக்கு அமெரிக்க அரசாங்கம் 3 மில்லியன் டாலர் பரிசுத் தொகை அறிவித்து இருந்தது. அமெரிக்காவால் பயங்கரவாத அமைப்பாக அறிவிக்கப்பட்ட தெஹ்ரிக்-இ-தாலிபான் பாகிஸ்தான் (TTP) அமைப்புடன் இணைந்த ஜமாத் உல்-அஹ்ரார் (JuA) என்ற போராளி அமைப்பின் தலைவர் தான் அப்துல் வாலி முகமது ஆவார்.

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் செயல்பட்டு வரும் தெஹ்ரிக்-இ-தாலிபான் பாகிஸ்தான் அமைப்புடன் இணைந்து செயல்பட்டு வரும் அமைப்புகளில் JuA அமைப்பும் ஒன்றாகும். பாகிஸ்தானில் பிறந்த வாலி, ஆப்கானிஸ்தானின் நங்கர்ஹர் மற்றும் குனார் மாகாணங்களில் இருந்து செயல்பட்டு வந்துள்ளார்.

அதேபோல் முன்னதாக குனார் மாகாணத்தில் பஜார் பழங்குடியின் மாவட்டத்தை சேர்ந்த மற்றொரு உயர்மட்ட தெஹ்ரிக்-இ-தாலிபான் பாகிஸ்தான் அமைப்பின் தலைவரான அப்துல் ரஷீதும் கண்ணிவெடி தாக்குதலில் கொல்லப்பட்டார். TTP பாகிஸ்தானில் பயங்கரவாத அமைப்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு தாக்குதலுக்கு அந்த அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

இந்த நிலையில் பாகிஸ்தான் ஏஜென்சிகளால் ஆப்கானிஸ்தானில் தனது தலைவர்கள் கொல்லப்பட்டதற்கு பழிவாங்க போவதாக TTP அறிவித்துள்ளது. பாகிஸ்தானின் வஜிரிஸ்தானில் பாகிஸ்தான் இராணுவம் மீதான தாக்குதலை அதிகரிக்குமாறு அழைப்பு விடுத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published.