பொருளாதார நெருக்கடியால் 1 மில்லியன் அகதிகளை திருப்பி அனுப்பும் துருக்கி..?

துருக்கி ஜனாதிபதி ரெசெப் தையிப் எர்டோகன், தனது முந்தைய கொள்கைகளை மாற்றியமைத்து தனத அரசாங்கம் 1 மில்லியன் சிரிய அகதிகளை தானாக முன்வந்து மரியாதையுடன் அவர்களது தாயகத்திற்கு திரும்ப அனுப்பி வருவதாக தெரிவித்துள்ளார். அடுத்த வருடம் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பொருளாதார நெருக்கடி மற்றும் மக்கள் எதிர்ப்பால் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஏற்கனவே சுமார் 5 லட்சம் சிரியா அகதிகள் பாதுகாப்பான பகுதிகளுக்கு திரும்பியுள்ளதாக எர்டோகன் கூறியநிலையில், 1,30,000 அகதிகள் மட்டுமே திரும்பியுள்ளதாக ஐ.நா கூறியுள்ளது. 2011 ல் சிரியாவில் உள்நாட்டு போர் வெடித்ததை அடுத்து சுமார் 3,6 மில்லியன் மக்கள் அண்டை நாடான துருக்கிக்கு அகதிகளாக குடியேறினர்.

இதுதவிர மேலும் 4 லட்சம் அகதிகள் ஆப்கானிஸ்தான், ஈராக் மற்றும் பிற நாடுகளில் இருந்து அகதிகளாக குடியேறியுள்ளனர். போர் தொடங்கிய பிறகு துருக்கிக்கு வர தொடங்கிய அகதிகளுக்காக துருக்கி அரசு 100 பில்லியன் டாலர்களுக்கு மேல் செலவழித்துள்ளது. இந்த நிலையில் அகதிகள் துருக்கியர்களுக்கு அச்சுருத்தலாக இருப்பதாக எதிர்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.

வடமேற்கு சிரியாவின் இட்லிப்பில் இடம் பெயர்ந்த சிரியர்களுக்காக துருக்கி கட்டியுள்ள வீடுகளின் சாவியை ஒப்படைக்கும் நிகழ்ச்சியில் காணொளி மூலம் பேசிய எர்டோகன். ஒரு மில்லியன் சிரிய சகோதர சகோதரிகள் தங்கள் சொந்த நாட்டிற்கு திரும்புவதற்கான திட்டத்தை நாங்கள் தயார் செய்து வருகிறோம். இலக்கை அடைய சர்வதேச மற்றும் உள்ளுர் சிவில் சமூக அமைப்புகளுடன் தனது அரசாங்கம் இணைந்து பணியாற்றும் என எர்டோகன் கூறினார்.

சிரிய அகதிகள் அவர்களின் விருப்பத்திற்கு மாறாக கட்டாயப்படுத்தி அனுப்பி வைக்கப்படுவதாக பல மனித உரிமை குழுக்கள் குற்றம் சாட்டியுள்ளன. மேலும் துருக்கியில் உள்ள சிரியா அகதிகள் குறைந்த ஊதியத்தில் வேலை பார்ப்பதால் அங்கு உள்ள துருக்கி மக்களுக்கு வேலை கிடைப்பதில்லை என துருக்கி மக்கள் குற்றம் சாட்டுகின்றன.

கடந்த வாரம் தி சைலன்ட் ஆக்குபேஷன் என்ற குறும்படம் வெளியிடப்பட்டது. அந்த வீடியோவில் 2043 ல் இஸ்தான்புல் நகரத்தை அரபு மொழி பேசும் அகதிகள் கைப்பற்றியதை காட்டுகிறது. அதேநேரம் துருக்கிய மொழி தடை செய்யப்பட்டுள்ளது. அதிக ஊதியம் பெறும் வேலைகள் சிரியர்களால் எடுக்கப்படுகின்றன. துருக்கியர்கள் சிறிய வேலைகளில் பணியமர்த்தப்படுகிறார்கள்.

Also Read: பாகிஸ்தானையும் சீனாவையும் இணைக்கும் ஹசனாபாத் பாலம் இடிந்து விபத்து..?

மேலும் மருத்துவமனைகளில் துப்புரவு பணியாளராக பணிபுரியும் ஒரு துருக்கிய இளைஞன், சிரியர்கள் மௌன படையெடுப்பை நடத்துகிறார்கள் என பலமுறை எச்சரித்தும் அதை எப்படி அனுமதித்தீர்கள்? என தனது பெற்றோரிடம் கேட்பது போன்று அந்த குரும்படம் எடுக்கப்பட்டுள்ளது.

ஆவணப்படத்தை எடுத்த ஹண்டே கராசு கூறுகையில், துருக்கியில் 8 மில்லியன் சிரியர்கள் வசிக்கிறார்கள். அவர்களில் பெரும்பாலானோர் தாயகம் திரும்பவில்லை. சிரிய பெண்களின் கருவுறுதல் விகிதம் 5.3 ஆக உள்ளது. 2043ல் 15 மில்லியனாக இருக்கும் என கூறினார். துருக்கி எதிர்கட்சிகளும் அகதிகளை சிரியாவுக்கு திருப்பி அனுப்ப வேண்டும் என கூறியுள்ளனர்.

Also Read: ஜம்முவின் செனாப் ஆற்றில் நீர்மின்நிலைய கட்டுமானத்திற்கு பாகிஸ்தான் எதிர்ப்பு..

புனித ரமலான் மாதத்தின் முடிவை குறிக்கும் மே மாத தொடக்கத்தில் ஈத் அல் பித்ர் விடுமுறைக்காக சிரிய அகதிகள் தங்கள் குடும்பங்களை பார்க்க தற்காலிகமாக சிரியாவுக்கு செல்கின்றனர். விடுமுறைக்காக சிரியாவுக்கு செல்லும் அகதிகளை மீண்டும் துருக்கிக்குள் அனுமதிக்க கூடாது என எர்டோகனின் கூட்டணி கட்சியான MHP கூறியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.