தைவானை விடுத்து ஒரு சீன கொள்கையை பின்பற்றுமாறு லிதுவேனியாவுக்கு அமெரிக்கா நெருக்கடி?

ஐரோப்பியாவில் அமைந்துள்ள குட்டி நாடான லிதுவேனியாவை தைவானை விடுத்து ஒரு சீனா கொள்கையை கடைபிடிக்குமாறு அமெரிக்க அதிபர் பிடன் வலியுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளன.

கடந்த ஆண்டு லிதுவேனியா அரசு சீனா மொபைல்களை பயன்படுத்த வேண்டாம் என தனது நாட்டு மக்களை கேட்டு கொண்டது. ஜனநாயக வார்த்தைகளான திபெத்தை விடுவிப்போம், தைவான் ஒரு சுதந்திர நாடு போன்ற வார்த்தைகளை மொபைல் போன்களில் பயன்படுத்துவோரை சீனா கண்காணிப்பதாக லிதுவேனியா குற்றம் சாட்டியது. இதனால் சீனா மற்றும் லிதுவேனியா இடையே மோதல் உருவான நிலையில் தைவான் ஒரு ஜனநாயக நாடு என கூறி சீனாவுக்கு அதிர்ச்சி கொடுத்தது. மேலும் தைவானிம் பிரதிநிதி அலுவலகம் லிதுவேனியாவில் திறக்கப்படும் எனவும் கூறியது.

அதன்படி கடந்த நவம்பர் மாதம் லிதுவேனியா தலைநகர் வீல்னியஸில் ஒரு பிரதிநிதி அலுவலகத்தை திறந்து அதற்கு தைவான் பிரதிநிதி அலுவலகம் என பெயரிட்டது. பொதுவாக வெளிநாடுகளில் இருக்கும் தைவான் பிரதிநிதி அலுவலகங்கள் தைபே பிரதிநிதி அலுவலகங்கள் அல்லது தைபே பொருளாதார மற்றும் கலாச்சார அலுவலகங்கள் என்ற பெயரிலேயே அழைக்கப்படுகின்றன.

அமெரிக்காவும் சீனாவின் ஒரு சீன கொள்கையை தான் கடைபிடித்து வருகிறது. இந்தியாவும் ஒரு சீன கொள்கையை தான் கடைபிடித்து வருகிறது. இந்த நிலையில் தைவான் என பெயரிட்டதால் அதிர்ச்சி அடைந்த சீனா வர்த்தக போரின் மூலம் லிதுவேனியாவிற்கு அச்சுறுத்தலை கொடுத்தது. இதனை அடுத்து பிரான்ஸ் தலைமையிலான ஐரோப்பிய ஒன்றியம் தலையிட்டு சீனா மீது பொருளாதார தடை விதிக்கப்படும் என கூறியதால் சீனா பின்வாங்கியது. இதனால் கோபமடைந்த சீனா ஐரோப்பிய யூனியன் உடன் மோதல் போக்கை கையான்டு வருகிறது.

இதனால் சீனா மத்திய மற்றும் ஐரோப்பிய நாடுகளுடன் உறவை மேம்படுத்த விரும்பிய முறைசாரா குழுவான 17+1 லிருந்து விலகியது. தற்போது இந்த பிரச்சனை ஐரோப்பிய யூனியனையும் பாதித்துள்ளது. ஏனென்றால் ஐரோப்பிய யூனியன் சீனாவுடன் ஆண்டுக்கு 828 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகிறது.

இதனால் இந்த வர்த்தகத்தை ஐரோப்பிய யூனியன் இழக்க விரும்பவில்லை. இன்னும் சில வாரங்களில் ஐரோப்பிய-சீனா உச்சி மாநாடு நடைபெற உள்ள நிலையில் அதற்கு முன் பிரச்சனையை தீர்க்க ஐரோப்பிய யூனியன் முயன்று வருகிறது. இந்த நிலையில் சீனாவின் கோபத்தை தணிப்பதற்காக தைவான் பிரதிநிதி அலுவலகத்தின் பெயரை மாற்றுமாறு லிதுவேனியாவிற்கு பைடனின் அமெரிக்க ராஐதந்திரிகள் சந்தித்து கோரிக்கை வைத்தாக கூறப்படுகிறது.

அமெரிக்க தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் செய்தி தொடர்பாளர் செய்தியாளர்கள் சந்திப்பில், பிடன் நிர்வாகம் பிரதிநிதி அலுவலகத்தின் பெயரை மாற்ற பரிந்துரைக்கவில்லை என கூறியுள்ளார். லிதுவேனியா மற்றும் தைவானின் உறவுகள் மற்றும் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான முயற்சிகளை நாங்கள் மதிக்கிறோம் என அமெரிக்கா கூறியுள்ளது.

இந்த நிலையில் ஜனவரி 4 அன்று லிதுவேனியா ஜனாதிபதி கிடானாஸ் நௌசேடா கூறுகையில், தைவான் பிரதிநிதி அலுவலகத்திற்கு தைவான் என்ற வார்த்தையை பயன்படுத்த அனுமதித்தது தவறு எனவும், இதுபற்றி முன்கூட்டியே ஆலோசிக்கப்படவில்லை என தெரிவித்துள்ளார். இதற்கு லிதுவேனியா எதிர் கட்சிகள் ஜனாதிபதியை கடுமையாக விமர்சித்துள்ளன.

ஒரு சீன கொள்கையை ஆதரிக்குமாறு லிதுவேனியாவிற்கு கூறிய அமெரிக்காவின் இந்த நடவடிக்கை உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஏற்கனவே தைவான் கடந்த ஆண்டு அமெரிக்காவில் உள்ள தைபே தூதரகத்தின் பெயரை தைவான் என மாற்றுமாறு கோரிக்கை விடுத்தது. ஆனால் அதுபற்றி அமெரிக்கா இதுவரை எந்த பதிலும் அளிக்கவில்லை. இதேபோல் கடந்த வாரம் மற்றொரு ஐரோப்பிய நாடான ஸ்லோவேனியா தைவான் ஒரு ஜனநாயக நாடு என டிடி இந்தியா தொலைகாட்சிக்கு அளித்த பேட்டியில் ஸ்லோவேனியா ஜனாதிபதி கூறி சீனாவிற்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார். இதற்கு சீனா எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில் ஐரோப்பிய யூனியன் மற்றும் அமெரிக்காவின் நிலை என்ன என்பது இனிமேல் தான் தெரியவரும்.

Leave a Reply

Your email address will not be published.